வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அறிக்கை: மக்களவையில் இன்று தாக்கல்

புதுடெல்லி,

வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வக்பு சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படடது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு 30-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி மசோதா தொடர்பாக ஆய்வு செய்தது. மசோதாவின் அம்சங்கள் தொடர்பாக கூட்டுக்குழு உறுப்பினர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். மசோதாவில் பல்வேறு திருத்தங்களுக்கு இரு தரப்பில் இருந்தும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த ஆலோசனை மற்றும் விவாதத்தின் நிறைவாக, பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்கள் கொண்டு வந்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எதிர்க்கட்சிகள் தரப்பில் கொண்டு வந்த திருத்தங்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிக்கையும், திருத்தங்களின் அடிப்படையிலான இறுதி வரைவு மசோதா மீது கடந்த 29-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால், கடந்த 30-ம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

கூட்டுக்குழுவின் உறுப்பினர்கள் உடனிருந்தனர். கூட்டுக்குழுவில் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஏற்கப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் முஸ்லிம்களின் மத விஷயங்களில் அரசு தலையிட அனுமதிப்பதன் மூலம் வக்பு வாரியத்தை அழிக்கும் என்றும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் வக்பு வாரிய திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் மக்களவையில் இதனை தாக்கல் செய்ய உள்ளார்.

மசோதா இன்று மக்களவையில் வைக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டத்தில் மாற்றங்களுடன் மசோதாவை நிறைவேற்ற அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிய உள்ளநிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.