இன்று தகவல் தொடர்புக்கு ஏராளமான சாதனங்கள் இருந்தாலும் அரசியல் நெருக்கடி நிலை, பெருவெள்ளம், நில நடுக்கம், போர், பஞ்சம், கொள்ளைநோய், காட்டுத்தீ உள்ளிட்ட அசாதாரண சூழல்களில் வானொலியே தகவல் தொடர்புக்கான முக்கியமான கருவியாக இருக்கிறது.
ஏ.எம், எஃப்.எம் போன்ற பண்பலை வானொலிகளைவிடக் குறுகிய அலை வானொலி, ஹாம் (HAM) வானொலி, சமூக வானொலி போன்றவை எவ்விதத் தகவல் தொடர்பு சாதனங்களும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுபவை. தகவல் தொடர்பு அற்றுப்போன நிலையில் வதந்திகளும் பொய்ச் செய்திகளும் மக்களிடையே பரவும் சூழலில் சமூக வானொலிகள் உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ளும் கருவியாக விளங்குகின்றன.
பேரிடர் மேலாண்மை: மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், பிஹார் பெருவெள்ளம், போபால் விஷவாயுக் கசிவு, குஜராத் நிலநடுக்கம், ஆந்திர மாநிலக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட புயல், சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களின்போது சமூக வானொலிகள் பெருமளவில் உதவின. வீடிழந்த மக்களுக்காகத் தங்கும் முகாம்கள், உணவு கிடைக்கும் இடங்கள் உள்ளிட்ட தகவல்கள் சமூக வானொலிகள் மூலமே மக்களைச் சென்றடைந்தன.
விழிப்புணர்வு: வட கிழக்கு மாநிலங்களில் பெருவெள்ளத்தால் ஆண்டுதோறும் உயிர்ச் சேதங்களும் லட்சக்கணக்கான ஹெக்டேரில் பயிர்ச் சேதங்களும் நிகழ்ந்துவந்த நிலையில் அங்கிருந்த மக்களுக்கு வானொலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசிகள், குடும்பக் கட்டுப்பாடு, ரத்த தானம் போன்ற அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டுசேர்த்ததில் வானொலியின் பங்கு மகத்தானது.
விடுதலை வானொலி: இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களுக்காக 1942இல் ‘ஆசாத் இந்த்’ (விடுதலை இந்தியா) வானொலியை ஜெர்மனியில் தொடங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். பிறகு சிங்கப்பூரில் இருந்தும் அதன் பிறகு அன்றைய ரங்கூனில் இருந்தும் இது ஒலிபரப்பானது. இந்த வானொலி அலைவரிசை மூலம் தமிழ், இந்தி, வங்கம், ஆங்கிலம், உருது எனப் பல மொழிகளில் வாரம் ஒரு முறை செய்திகள் ஒலிபரப்பாகின.
வானிலை வானொலி: வானிலை குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் கையடக்க வானிலை வானொலிகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. அருகில் இருக்கும் வானிலை மையங்களில் இருந்து தகவல்களைப் பெற முடியும். வானொலி அணைந்த பிறகும் தகவல்கள் பெறும் வகையிலான வானொலிகளும் உண்டு.
இன்று – பிப்.13 – உலக வானொலி நாள்