800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் ஆய்வு செய்த மத்திய தொல்லியல் துறையினர்

மதுரை: இந்து தமிழ் திசை செய்தி எதிரோலியாக மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் மலைச்சரிவில் இருந்த 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கருங்காலக்குடி அருகே அமைந்துள்ளது கம்பூர் கிராமம். கம்பூரின் மேற்கு புறத்தில் அமைந்துள்ள வீரக்குறிச்சி மலையில் 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் உள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த மத்திய தொல்பொருள் துறையினர் இன்று கம்பூர் கிராமத்திற்கு சென்று 3 கல்வெட்டுகளையும் மை படி எடுத்தனர். கல்வெட்டுக்கள் வீரக்குறிச்சி மலையின் தெற்கு சரிவில் அடுத்தடுத்து ஒட்டினார் போல காணப்படுகின்றன.

இடது ஓரத்தில் உள்ள முதல் கல்வெட்டில் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியனின் 7ஆம் ஆட்சியாண்டான கி.பி.1223-ல் சிவன் கோயிலுக்கு பாஸ்கரன் என்னும் படைத் தலைவன் நிலக் கொடை அளித்துள்ளதையும், திரமம் என்னும் காசு ஒன்றும் கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுமான செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கல்வெட்டு, அதே பாண்டிய மன்னனின் 12வது ஆட்சி ஆண்டான கி.பி.1228-ல் கம்பூர் மக்களும் தென்ன கங்கத்தேவன் என்னும் இப்பகுதியின் தலைவரும் சேர்ந்து இங்கு இருக்கும் அறைச்சாலை பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக நிலத்தை தானமாக, படைத்தலைவன் பாஸ்கரனுக்கு அளித்திருக்கும் தகவல் இடம்பெற்றுள்ளது.

மூன்றாவது கல்வெட்டிவிலிருந்து மேற்கண்ட அதே பாண்டிய மன்னான முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நிலதானம் தரப்பட்டுள்ள குறிப்பு இடம்பெற்றுள்ளது. கம்பூர் என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூர் முற்கால வழக்கத்தில் கம்பவூர் எனவும் தற்சமயமுள்ள நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி முன்பு துவாரபதி நாடு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளதை கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மூலம அறிந்து கொள்ளமுடிவது குறிப்பிடத்தக்கது.

சென்னை மத்திய தொல்பொருள் துறையின் தமிழ் கல்வெட்டு பிரிவிலிருந்து உதவி கல்வெட்டு ஆய்வாளர், ஜெ. வீரமணிகண்டன், மெய்ப்படியாளர்கள் சொ. அழகேசன், அ. காத்தவராயன், ஆகியோர் சுமார் 5 மணி முயற்சி செய்து கல்வெட்டுகளை படி எடுத்தனர். சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, சூழலியல் மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் கம்பூர் செல்வராஜ், பால் குடி கதிரேசன், ராஜா என்ற பிச்சைமுத்து உள்ளிட்டோர் மேற்கண்ட ஆய்விற்கும் உதவியாக இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.