இந்தியாவில் பசுமைப் புரட்சி வெற்றியடைந்ததில் வானொலியின் பங்கும் முக்கியமானது. அதிக மகசூல் தரும் நெல், கோதுமை ரகங்களைப் பயிரிடும் தேசிய அளவிலான திட்டம் 1966இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றை எப்படிப் பயிரிடுவது, அதற்கான பருவம், அறுவடை போன்ற தகவல்கள் விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் அகில இந்திய வானொலியின் மண்டல ஒலி பரப்பு நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டன.
அந்தத் திட்டம் வெற்றியும் கண்டது. அரசின் வானொலி அறிவிப்பைப் பின்பற்றி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏடிடி-27 ரக நெல் அன்றைக்குப் பயிரிடப்பட்டு வெற்றிகரமாக மகசூல் கண்டதால் அந்த நெல் ரகத்தை ‘ரேடியோ நெல்’ என்றே அழைத்தார்கள்.
1960 முதல் 1970 வரை கிராமப்புற வளர்ச்சியில் வானொலியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வானொலியைக் கேட்கும் ‘கிராமப்புற வானொலி மன்றங்கள்’ திட்டத்தை ‘யுனெஸ்கோ’ ஊக்குவித்தது. இந்தியாவைத் தொடர்ந்து கானா, தான்சானியா, தாய்லாந்து போன்ற நாடுகள் கிராமப்புற வானொலி மன்றத் திட்டத்தைப் பின்பற்றின.
இன்று – பிப்.13 – உலக வானொலி நாள்