ஒலிச் சித்திரம் முதல் 1983 உலகக் கோப்பை வரை – அது வானொலியின் பொற்காலம்!

உலக அளவில் 1920கள் ‘வானொலியின் பொற்காலம்’ என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இசை, நகைச்சுவை, நாடக நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின.1921ஆம் ஆண்டு அமெரிக்காவில் 5 வானொலி நிலையங்கள் இருந்தன.

1930இல் 600க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்கத் தொடங்கியிருந்தன. வானொலியின் இந்த அசுர வளர்ச்சி அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் கண்கூடாகத் தெரிந்தது. இந்த வளர்ச்சிக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டதும் அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பும் ஒரு முக்கியக் காரணம்.

வானொலியில் செய்திகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் இந்தியாவில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் திரையிசையை மட்டுமே வைத்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்திருந்தது இலங்கை வானொலி. அதனால், சுதாரித்துக்கொண்ட அகில இந்திய வானொலி திரையிசைக்கும் முக்கியத் துவம் தரத் தொடங்கி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது.

அப்போதுதான், 1957இல் திரை இசையை மையப்படுத்தி விளம்பரதாரர்களைக் கவர்வதற்காக ‘விவித்பாரதி’ தொடங்கப்பட்டது. இதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் விளம்பரங் களும் ஒலிபரப்பாகின.

திரைப்படங்களை ஒலி வடிவில் ஒலிபரப்பிய ‘ஒலிச் சித்திரம்’, பாடல்களை ஒலிபரப்பிய ‘மெல்லிசை’, நாடகங்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’, இளைஞர்களுக்காக இளைஞர்கள் தொகுத்து வழங்கிய ‘இளைய பாரதம்’, நல்வாழ்வு பற்றிய ‘ஆரோக்கிய பாரதம்’ போன்ற நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலியின் தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை.

இவை தவிர பட்டிமன்ற நிகழ்ச்சிகள், கல்வி, விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டன. 1977இல் இந்தியாவின் முதல் பண்பலை ஒலிபரப்பு (எஃப்.எம்) சென்னையில் தொடங்கப்பட்டபோதும் 1993இல் தனியார் பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்ட போதும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

ஒரு பக்கம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரவேற்பைப் பெற்றிருந்த அதேநேரம், 1934இல் முதல் முறையாக இந்திய வானொலியில் கிரிக்கெட் வர்ணனை ஒலிபரப்பு செய்யப்பட்டது. முழு நேர கிரிக்கெட் வர்ணனையாக இல்லாதபோதும் கிரிக்கெட் போட்டி கள் பற்றிய தகவல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டன.

அந்தக் காலத்தில் முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது சுவாரசியமான நிகழ்வுகள், முடிவுகள் வானொலியில் தான் முதலில் அறிவிக்கப்பட்டன. பொது இடங்களில் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டு வானொலியின் வழியே நாடெங்கும் வீதிகளுக்கு கிரிக் கெட் விளையாட்டு எடுத்துச்செல்லப்பட்டது. கிரிக்கெட் செய்திகளுக் கென வானொலி கேட்டவர் உண்டு. இது அகில இந்திய வானொலிக்கு நல்ல வருவாயையும் ஈட்டித் தந்தது.

1983இல் இந்தியாவில் பெரும்பலான குடும்பங்களில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. இந்தியா – மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்ற செய்தி வானொலியில் நேரலையில் அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டது. பின்பு தொலைக்காட்சி ஏற்படுத்திய புரட்சிக்குப் பிறகு வானொலியில் கிரிக்கெட் சார்ந்த ஆர்வம் என்பது மறையத் தொடங்கியது.

இன்று – பிப்.13 – உலக வானொலி நாள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.