IPL 2025, Ruturaj Gaikwad vs Rajat Patidar: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நிறைவடைந்ததும், கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனமும் ஐபிஎல் தொடர் மீதுதான் இருக்கும். பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடைபெற்றாலும், ஐபிஎல் தொடர்தான் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மற்றும் அதிக பொருளாதாரத்தை ஈட்டும் லீக் தொடராக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் என்பது இந்தியாவின் முன்னணி வீரர்கள், வெளிநாட்டு அணிகளின் முன்னணி வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கும் தொடராக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதன் நோக்கமே இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வீரர்கள் வர வேண்டும், அவர்களது திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
IPL 2025: ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
அப்படிதான் பல்வேறு வீரர்கள் ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட ஐபிஎல் தொடரில் விளையாடி பல கோடிகளை அள்ளுகின்றனர். உதாரணத்திற்கு நம்மூர் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை குறிப்பிடலாம். அந்த வகையில், நட்சத்திர வீரர்கள் கேப்டன்ஸியில் இருந்து விலகும் சூழலில், பெரும் நட்சத்திர அந்தஸ்தை பெறாதவர்களும் கூட கேப்டன் பொறுப்பை ஏற்கின்றனர். அப்படிதான் தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். 31 வயதான ரஜத் பட்டிதார் மத்திய பிரதேச மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
IPL 2025: SMAT தொடரில் மிரட்டிய ரஜத் பட்டிதார்
மிகப்பெரிய அணியான ஆர்சிபியில், வெறும் 3 டெஸ்ட், 1 ஓடிஐ போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்திருப்பது பெரும் ஆச்சர்யம் அளிக்கிறது என்றாலும், உள்ளூர் தொடர்களில் ரஜத் பட்டிதார் கேப்டனாக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் தலைமையிலான மத்திய பிரதேச அணிதான் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20இல் ரஜத் பட்டிதார் இதுவரை அறிமுகம் ஆகவில்லை, இனி அறிமுகம் ஆகும் வாய்ப்பும் குறைவுதான்.
IPL 2025: சிஎஸ்கே vs ஆர்சிபி
இது ஒருபுறம் இருக்க, ஆர்சிபி அணி ரசிகர்களுக்கும், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது எனலாம். அந்த பனிப்போர் கடந்தாண்டு நடைபெற்ற கடைசி லீக் போட்டியால் உச்சத்திற்கு சென்றுவிட்டது. தோனி இந்தாண்டு மீண்டும் விளையாடுவதற்கு காரணமே ஆர்சிபி உடனான அந்த போட்டிதான் என்றும் கூறப்படுகிறது. எனவே, வழக்கத்தை விட இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிக்கு இடையிலான போட்டி அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.
IPL 2025: ருதுராஜ் கெய்க்வாட் vs ரஜத் பட்டிதார்
இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 அரங்கில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோரை ஒப்பிட்டு, அதில் யார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.
டி20இல் ருதுராஜ் கெய்க்வாட்
28 வயதான ருதுராஜ் கெய்க்வாட் டி20 அரங்கில் 139 இன்னிங்ஸில் விளையாடி 4,874 ரன்களை அடித்துள்ளார். இதில் 33 அரைசதங்கள், 6 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 123 ரன்களை அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 140.46 ஆகும். சராசரி 39.95 ஆக உள்ளது. 17 முறை நாட்-அவுட்டாக இருந்துள்ளார். 465 பவுண்டரிகள், 188 சிக்ஸர்களை விளாசி உள்ளார். 70 கேட்ச்களை பிடித்துள்ள இவர், பார்ட் டைம் விக்கெட் கீப்பராகவும் இருந்து 4 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்
இவர் 2020ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணியில் இருந்து வருகிறார். கடந்தாண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் சிஎஸ்கே 14 போட்டிகளில் 7 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் சந்தித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
டி20இல் ரஜத் பட்டிதார்
ரஜத் பட்டிதார் 71 இன்னிங்ஸில் விளையாடி 2463 ரன்களை குவித்துள்ளார். அதில் 1 சதம் மற்றும் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 112 ரன்களை அடித்துள்ளா். ஸ்ட்ரைக் ரேட் 158.18 ஆக உள்ளது. சராசரி 38.48 ஆக உள்ளது. இதில் 7 முறை நாட்-அவுட்டாக இருந்துள்ளார். 181 பவுண்டரிகளையும், 143 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். 39 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ரஜத் பட்டிதார்
ஐபிஎல் தொடரில் 2021ஆம் ஆண்டில் ஆர்சிபி அணிக்குள் வந்த ரஜத் பட்டிதார், 2022ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு ஏலத்தில் அவரை யாரும் எடுக்கவில்லை. அதன்பின், லவ்னித் சிசோடியாவுக்கு பதில் மாற்று வீரராக ஆர்சிபி ரஜத் பட்டிதாரை எடுத்தது. அந்த சீசனில், ஆர்சிபிக்கு 8 போட்டிகளில் விளையாடி 333 ரன்களை (ஸ்ட்ரைக் ரேட் – 152.75) அடித்தார்.
2023ஆம் ஆண்டில் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டாலும் காயத்தால் விளையாடவில்லை. 2024ஆம் ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 33 சிக்ஸர்கள் உள்பட 395 ரன்களை (ஸ்ட்ரைக் ரேட் – 158.84) அடித்த காரணத்தால், 2025இல் ஆர்சிபி அணியால் ரூ.11 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டார். தற்போது கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார்.