பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபாமா, கயடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இன்னைக்கு நான் எதுவும் கெட்ட வார்த்தை பேசல. ஒரு கொம்பை அறுத்து எடுத்துட்டாங்க. இன்னும் ஒரு கொம்புதான் இருக்கு. நான் இதுமாதிரியான மேடைகளுக்கு வராமல் ஒரு வருடம் இடைவெளி எடுத்துக்கலாம்னு நினைச்சேன். பிரதீப் ரங்கநாதன் ஒரு புரூஸ் லீ. இதுவரைக்கும் அவன் ஆக்ஷன் படம் பண்ணல. ஒருவேளை என்கூட பண்ணினாலும் பண்ணுவான். ரொம்ப நாட்களுக்குப் பிறகு சினிமாவுல ஒரு இளைமையான ஸ்டார் பார்க்கிறேன்.

இது லக்ல நடந்த விஷயம் கிடையாது. இதற்காக அவன் வியர்வையைக் கொடுத்து உழைச்சிருக்கான். இந்தப் படத்துல அவனுக்கு நான் வில்லன். ஆனால், நல்ல் வில்லன். ரொம்ப அர்ப்பணிப்போட வேலைகளை கவனிப்பான். ரொம்பவே கனிவானன் அவன். அந்த லிஸ்ட்ல விஜய் சேதுபதி இருக்கான். இப்போ இருக்கிற நடிகர்கள் நான்கு படங்கள் நடிப்பாங்க. அதன் பிறகு உயரமே ஆகாமல் ரெண்டு அடி வளர்ந்துடுவாங்க. ரசிகர் மன்றமெல்லாம் வச்சுடுவாங்க. படம் பண்றதுக்காக பிரதீப்புக்கு ஐஸ் வைக்கிறேன்னு சொல்வாங்க. இவ்வளவு சின்ன வயசுல அவனுக்கு அதிகளவிலான ரசிகர்கள் இருக்காங்க. அவனைப் பற்றி என்னுடைய உதவி இயக்குநர்கள்கிட்ட பேசுவேன். ‘என்ன சார் அவன் என்ன பெரிய வெங்காயமா’னு கேப்பாங்க. ஆமா, அவன் பெரிய வெங்காயம்தான்னு சொல்லுவேன். அவன்கூட வேலை பார்த்ததை எண்ணி பெருமையாக உணர்றேன். அஸ்வத் மாரிமுத்து ரொம்ப கடினமாக உழைக்கக்கூடிய ஒரு இயக்குநர்.
இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை அவங்களுக்கான வழியில சொல்லியிருக்கான். இந்தப் படத்துக்குப் பிறகு சிம்புகூட ஒரு படம் பண்றான்.” என்றவர், ”பேட் கேர்ள்னு ஒரு படத்தோட ட்ரைலர் வந்தது. அந்தப் படத்தை வெளிவரவிடாமல் போட்டு அமுக்குறாங்க. அந்தப் படத்தை ஒரு பெண் எடுத்திருக்கிறாள்.

20 வருஷத்துக்கு ஒரு பெண் இயக்குநர்தான் வராங்க. அந்த பெண்ணோட படம் வெளில வரணும். அந்தப் பெண் கலங்கிட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை இங்க பதிவு பண்ண விரும்புறேன்.” என்றவரிடம் படக்குழுவினரின் புகைப்படங்கள் காட்டப்பட்டது. தன்னுடைய புகைப்படத்தை பார்த்து மிஷ்கின், “சினிமாவுல இருந்து சீக்கிரம் வெளியேறப் போகும் இயக்குநர் இவர்தான். ” என்றார்.