வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக கடந்த மாதம் பதவியேற்றார். அப்போது முதல் ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவது, இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பது போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
டிரம்பின் இந்த அதிரடிகள் இந்தியாவையும் பாதித்து உள்ளன. குறிப்பாக டிரம்பின் உத்தரவின்பேரில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அந்த நாடு திருப்பி அனுப்பி வருகிறது. கைகளில் விலங்குடன் 104 பேரை நாடு கடத்திய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதிக்கு சமீபத்தில் டிரம்ப் அறிவித்த 25 சதவீத வரியால் மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது
இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான இந்தியர்கள் குவிந்து பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். ‘பாரத் மாதா கி ஜே’, ‘வந்தே மாதரம்’ என முழங்கியும், ‘மோடி, மோடி’ என கோஷமிட்டும் வரவேற்றனர்.இந்த வரவேற்பால் நெகிழ்ந்து போன பிரதமர் மோடி, மனமகிழ்ச்சியுடன் அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து எலான் மஸ்க், அமெரிக்க புலனாய்வுப்பிரிவு தலைவர் துளசி கப்பாட் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் மோடி சந்தித்தார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி, அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.