புதுடெல்லி: மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, சரத்பவார் விருது வழங்கியதால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சிவசேனா (உத்தவ் அணி) ஆதித்ய தாக்கரே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலை நேற்று முன்தினம் சந்தித்தார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு புனேவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சர்ஹத் சார்பில் மகாத்ஜி ஷிண்டே ராஷ்ட்ரா கவுரவ் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதை மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வழங்கினார். இந்த நிகழ்வு மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, சிவசேனாவைச் (உத்தவ் அணி) சேர்ந்த ஆதித்ய தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். இதில் தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள், ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத்பவார் விருது வழங்கியது உட்பட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
விருது சர்ச்சை: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலையும், ஆதித்ய தாக்கரே சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவார் விருது வழங்கியது குறித்து கருத்து தெரிவித்த ஆதித்ய தாக்கரே, ‘‘மகாராஷ்டிராவுக்கு எதிரானவர்கள், தேச விரோதிகள். இதுபோன்ற நபர்களை நாம் கவுரவிக்க முடியாது. இது நமது கொள்கைகளுக்கு எதிரானது. சரத்பவாரின் கொள்கை பற்றி எனக்கு தெரியாது’’ என்றார்.