மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் இன்று தொடக்கம்; முதல் ஆட்டத்தில் குஜராத்- பெங்களூரு அணிகள் மோதல்

வதோதரா,

மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.

இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் நால் அவுட் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

பெங்களூரு, லக்னோ, மும்பை, வதோதரா ஆகிய நகரங்களில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை.

வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.