இந்திய வரலாற்றிலும் இதிகாசங்களிலும் காதல் கதைகள் நிறைந்துள்ளன. குறைந்தபட்சம் ஒரு காதல் ஜோடி இல்லாமல் எந்த கதையும் எழுதப்படவில்லை. இவை பாணர்களால் பாடப்பட்டு வந்த காலம் முதல் இன்றுவரை காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக இருக்கின்றன.
காதலின் தெய்வீகம், தியாகம், சமூகத்தால் ஏற்படும் சவால்களை எப்படி காதலர்கள் கடக்கின்றனர் என்பதுதான் அன்று முதல் இன்றுவரை உள்ள கதைகளுக்கு அடித்தளம்.
இந்திய காதல் கலாச்சாரத்தைப் பேசும் சில கதைகள் பற்றி இங்கு காணலாம்…
கிருஷ்ணன் – ராதை
இதிகாசங்களைப் பற்றி பேசும்போது கண்ணன் – ராதை ஜோடியை தவிர்க்க முடியாது. விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் மாடு மேய்க்கும் பெண்ணான ராதைமீது கொள்ளும் காதல் குறும்புகளும் சவால்களும் நிறைந்தது. இன்று இந்த ஜோடிக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கின்றனர்.
ஷாஜகான் – மும்தாஜ்
முகலாய வரலாற்றுக்கு பல அடையாளங்கள் இருந்தாலும் உடனுக்குடன் நினைவுக்கு வருவது தாஜ்மஹாலும், ஷாஜகான்-மும்தாஜின் காதல் கதையும் தான். இந்த தம்பதியில் காதலுக்கு அடையாளமாக 14-வது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது மும்தாஜ் மரணமடைந்தார். அவருக்கு அடையாளமாக ஷாஜகான் ஒரு உலக அதிசயத்தை எழுப்பியுள்ளார்.

சலீம் – அனார்கலி
சலீம் முகலாய மன்னர் அக்பரின் மகன் என நம்பப்படுகிறது. இவர் விலைமகளான அனார்கலி மீது காதல் கொண்டார். சமூக ஏற்றத்தாழ்வுகள் காரணமாக அக்பர் இவர்களின் காதலுக்கு எதிரியாக இருந்தார். இவர்களது காதல் கதை பல கலைப்படைப்புகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது. எப்போதும் அழிவில்லாத கதை இவர்களுடையது.
தோலா – மரு
இது ராஜஸ்தானில் பிரபலமான கதை. இளவரசர் தோலாவும், இளவரசி மருவும் குழந்தைப்பருவ நண்பர்கள். அரசியல் காரணங்களுக்காக மரு மற்றொரு இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். மருவுட இணைந்து வாழ்வதில் உறுதியாக இருந்த தோலா, மாறுவேடமிட்டு அவளை மீட்டு வருவதுதான் கதை.
ஹீர் – ரஞ்சா
இவர்களது கதை பஞ்சாபில். கவிஞர் வாரிஸ் ஷா என்பவர் இந்த பழங்கதையை பிரபலப்படுத்தினார். ஹீர் விவசாய தொழில் செய்யும் உயர்சாதி குடும்பத்தைச் சேர்ந்த பெண், ரஞ்சா ஏழை ஆடு மேய்ப்பவர். தங்களது சமூக வகுப்பைப் பற்றி கவலைகொள்ளாமல் இருவரும் காதலித்தனர். அவர்களது காதலை பெற்றோர்கள் எதிர்த்ததால் தொடர்ந்து பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்தனர். அவர்களது அழியாத காதலையும் சமூக தடங்கல்களையும் இந்த கதை பேசும்.

பாஸ் பகதூர் – ரூபாமதி
பாஸ் பகதூர் மால்வா ராஜ்ஜியத்தின் கடைசி சுதந்திர மன்னர், ரூபாமதி திறமையான கவி மற்றும் பாடகி. ரூபாமதியின் குரல்தான் பாஸை வசீகரித்தது. முகலாய மன்னர் அக்பர் இவர்களது ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்ததன் விளைவாக இவர்கள் இருவரும் பிரிய நேரிடும் சோகமான முடிவு இவர்கள் கதைக்கு.
மிர்ஸா – சாஹிபா
பஞ்சாபில் பிரபலமான காதல் கதை இவர்களுடையது. விவசாயம்-போர் செய்யும் ஜாட் சமூக இளவரசி சாஹிபாவுக்கு மிர்ஸா என்ற இஸ்லாமியருடன் காதல் ஏற்படுகிறது. இவர்களும் குழந்தைப் பருவ நண்பர்கள். ஆனால் சாஹிபாவின் குடும்பம் இவர்களது காதலை முற்றிலுமாக எதிர்த்தது. சுப்பிரமணியபுரம் படத்தைப்போல சாஹிபா துரோகிப்பதால் மிர்ஸா மரணமடையும் சோகமான முடிவு இந்த கதைக்கு.