வாஷிங்டன்,
மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது 63 வயதாகும் தஹாவூர் ராணாவை கடந்த 2009-ம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதற்கிடையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டுகளில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்தித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட மிகவும் ஆபத்தான ஒருவரை நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” என்று கூறினார்.
இதற்காக அதிபர் டிரம்புக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறும்போது, “மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொர்புடைய பயங்கரவாதி இந்தியாவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படுகிறார். இந்த செயல்முறையை விரைவுபடுத்தியதற்காக அதிபர் டிரம்புக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.