ICC Champions Trophy 2025: Ravindra Jadeja | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி 19 பிப்ரவரி முதல் 9 மார்ச் வரை நடைபெற உள்ளது. இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்துக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால் இந்த போட்டிகளையும் இந்திய அணி துபாயிலேயே விளையாடும். இந்த சூழலில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருக்கப்போகும் ஒரு பிளேயரைப் பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். அவர் ரவீந்திர ஜடேஜா தான்.
ரவீந்திர ஜடேஜா: இந்திய அணியின் துருப்புச் சீட்டு
ரவீந்திர ஜடேஜா ஒரு 3டி பிளேயர். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் பிளேயர். அதனால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நினைத்தால் கூட அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க முடியாது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா இடது கை பேட்ஸ்மேனாக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். ரைட், லெப்ட் பேட்ஸ்மேன் காம்பினேஷனுக்கும் செட்டாக கூடிய பிளேயர். இத்தகைய திறமை வாய்ந்த ஜடேஜா சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இதுவரை 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஜடேஜா ஒருநாள் போட்டி சாதனைகள்
ஒட்டுமொத்தமாக ஒரு நாள் போட்டிகளின் சாதனைகளை கணக்கிட்டால் 199 மேட்சுகளில் 226 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. மேலும், அவர் 2779 ரன்களையும் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் ஜடேஜா 13 அரைசதங்களை விளாசியுள்ளார். 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தது அவரின் சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது.
ரவீந்திர ஜடேஜா மந்திரம்
ரவீந்திர ஜடேஜா தனது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம் மேட்சின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர். அவரது இடது கை ஸ்பின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. ஜடேஜா எப்போதும் தனது ஓவர்களை வேகமாக முடித்து, எதிரணி வீரர்கள் ரன் எடுக்கும் வாய்ப்பை குறைக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் ஜடேஜா தனது திறமையால் பல மேட்சுகளை இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். இதனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் ஜடேஜா இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.