விமான பயணிகள் அணிந்து வரும் தங்க நகைகள் குறித்த தனி நீதிபதிகள் உத்தரவுக்கு தடை

சென்னை: விமான பயணிகள் அணிந்து வரும் தங்க நகைகளை அவர்களின் உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து விமானம் மூலமாக சென்னை திரும்பிய இளம்பெண் ஒருவர் தனது கைகளில் 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை அணிந்து வந்ததாகக்கூறி அவற்றை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல இலங்கையில் இருந்து வந்த புதுமணப்பெண் அணிந்திருந்த 88 கிராம் எடையுள்ள தாலிச்செயினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

இதுபோல பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளுக்கு சுங்கவரி விதிக்க முடியாது என சமீபத்தில் உத்தரவிட்டிருந்த தனி நீதிபதி, அந்த நகைககளை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை பெண் அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சுங்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி. சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “50 ஆயிரம் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள் விமான பயணிகளின் உடைமைகளாகவே கருதப்பட்டு சுங்கவரி வசூலிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் உள்ளது.

பயணிகள் உடலில் அணிந்துள்ள நகைகளை உடைமைகளாக கருத முடியாது என்றால் அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிப்புக்குள்ளாக்கும். அது, தாராளமாக விமான பயணிகள் எவ்வளவு கிலோ நகைகளையும் இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும் என்ற கள்ளச் சந்தைக்கும் வித்திடும். எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஈடாக பிணை அல்லது உத்தரவாதம் பெற்று அவற்றை உரியவர்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.