2021-ல் திமுக ஆட்சி அமைந்த நாள்முதல் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை என ஒட்டுமொத்த திமுக-வினரும் `திராவிட மடல் ஆட்சி’ என்ற சொல்லாடலை மேடை எங்கும் ஒலித்துவருகின்றனர். இவ்வாறிருக்கவே, கடந்த ஆண்டு ஜூலையில், திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கலைஞருக்கு முன்னால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கின்ற, சமூகநீதியின் காவலர் ராமன்.” என்று கூறி விமர்சனத்துக்குள்ளானார்.

இந்த நிலையில், மற்றொரு திமுக அமைச்சர் சேகர் பாபு, “இதுவொரு ஆன்மிக ஆட்சி” என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, காதலர் தினமான இன்று சென்னையில், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 30 இணைகளுக்கான திருமணங்களை நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து வாழ்த்தி உரையாற்றினார்.
பின்னர், மேடையில் உரையாற்றிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. “இந்த ஆட்சி அமைந்த பிறகுதான், திருக்கோயில்களில் தீப ஆராதனை, எங்கும் மணியோசை, எங்கும் தேவாரம் திருவோசை என மகிழ்ச்சியோடு இறையன்பர்கள் இருக்கிறார்கள் என்றால், இதுவொரு ஆன்மிக ஆட்சி என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இன்றைக்கு இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பல்வேறு வியூகங்கள் திரைமறைவிலும், வெளியுலகிலும் நடந்துகொண்டிருக்கின்றன. மத்தியில் ஆளும் ஒன்றிய அரசுக்கு பி டீம்களாக பல்வேறு முனைகளிலிருந்து பல்வேறு அரசியல் கணக்குகளைக் குருட்டு மதியோடு திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று தமிழகத்து மக்களின் நிலை என்னவென்றால், ஒருபுறம் எங்கு திரும்பினாலும் அப்பா, அப்பா என்று எங்கள் தளபதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மறுபுறம், அண்ணா, அண்ணா என்கிற குரல் எங்களின் துணை முதலமைச்சரை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு கூட்டணிகளும் ஒருங்கிணைகின்றபோது 2026-ல் முதல்வர் சொல்லியதுபோல் 200 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதற்கு முன்னால், திருமண வீடுகளில் 100 ஆண்டுகள் வாழுங்கள் என்று சொல்வார்கள். இனி 100 ஆண்டுகள் என்பதை மாற்றிக்கொண்டு, 200 வாழ்க என்று வாழ்த்துவதுதான் திமுக-வினரின் கடமை.” என்று கூறினார்.