வாஷிங்டன்: வங்கதேச நிலைமை குறித்த தனது கவலையை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்டார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, வங்கதேச ஆட்சி மாற்றத்தில் அமெரிக்க அரசின் பங்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “இவ்விஷயத்தில் அமெரிக்க அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இது பிரதமர் மோடி நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஒரு விஷயம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்காகப் பணியாற்றி வருகிறார். நான் அதைப் பற்றிப் படித்து வருகிறேன். வங்கதேசத்தை பிரதமரிடம் விட்டுவிடுகிறேன்.” என்றார்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்ப்பிடம் என்ன பேசினார் என்ற கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “வெள்ளை மாளிகையில் மோடியை டிரம்ப் வரவேற்றார். அப்போது அவர்கள் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
வங்கதேசத்தின் நிலைமை இரு தலைவர்களுக்கும் இடையே விவாதப் பொருளாக இருந்தது. வங்கதேசத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள், அதை இந்தியா எவ்வாறு பார்க்கிறது என்பது குறித்து பிரதமர் மோடி தனது கருத்துக்களை, உண்மையில் தனது கவலைகளை பகிர்ந்து கொண்டார்.
ஆக்கபூர்வமான மற்றும் நிலையான வழியில் உறவுகளைத் தொடரக்கூடிய ஒரு திசையில் வங்கதேசம் முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம். எனினும், தற்போதைய நிலைமை குறித்து கவலைகள் உள்ளன. அது தொடர்பான தனது கருத்துக்களை பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்புடன் பகிர்ந்து கொண்டார்,” என்று தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், டாக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அந்த நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து உறவுகள் ஆச்சரியப்படும் அளவுக்கு மோசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.