புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் (பிப்.14) ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அஞ்சலி செலுத்தினர். மேலும் தேசத்துக்கான அத்தியாகிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் அவர்கள் பாராட்டினர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2019-ல் புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் மற்றும் தேசத்துக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினை வரும் தலைமுறையினர் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் நடந்த கோழைத்தனமான தாக்குதலில் தங்களின் இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கு தேசத்தின் சார்பில் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிரவாதம் என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி, அதற்கு எதிராக உலகமே இப்போது ஒன்றிணைந்துள்ளது. அது சர்ஜிக்கல் தாக்குதலாகட்டும் அல்லது விமானத் தாக்குதலாகட்டும் தீவிரவாதிகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற கொள்கையுடன் அவர்களை முற்றிலும் அழிக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்துடன் ஒரு தற்கொலை தீவிரவாதி மோதி வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பின்பு இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா வான்வழியாக தாக்குதல் நடத்தியது. அது பாலகோட் தாக்குதல் என்று அறியப்படுகிறது.