வதோதரா,
மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் இன்று தொடங்கியது.
வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூனி, லாரா வால்வார்ட் களமிறங்கினர். இதில் லாரா வால்வார்ட் 6 ரன்களிலும், அடுத்து வந்த ஹெமலதா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் கை கோர்த்த பெத் மூனி – கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். பெத் மூனி நிதான ஆட்டத்தை கடைபிடிக்க மறுமுனையில், ஆஷ்லி கார்ட்னெர், பெங்களூரு பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பெத் மூனி 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது. ஆஷ்லி கார்ட்னெர் 37 பந்துகளில் 8 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் ரேனுகா தாகூர் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 18.3 ஓவர்களில்4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டபிள்யூ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றிகரமாக விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். ரிச்சா கோஷ் 64 ரன்களுடனும் (27 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), கனிகா அகுஜா 30 ரன்னுடனும் (13 பந்து, 4 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.