உ.பி. மகா கும்பமேளா: பிரயாக்ராஜ் நகருக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கம்

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்களுக்கு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

இந்த வருடம் மகா கும்பமேளாவுக்கு 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு (15, 16 மற்றும் 17 ஆகிய நாட்கள்) புதுடெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக வாரணாசிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, காலை 5.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து புறப்படும் ரெயில் பிரயாக்ராஜ் நகருக்கு நண்பகல் 12 மணியளவில் வந்து சேரும். இதன்பின்னர், வாரணாசிக்கு பிற்பகல் 2.20 மணிக்கு வந்து சேரும் என வடக்கு ரெயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

இதன்பின்னர், வாரணாசியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் ரெயில் பிரயாக்ராஜ் நகருக்கு மாலை 5.20 மணிக்கு வந்தடையும். பின்னர் புதுடெல்லிக்கு இரவு 11.50 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வார இறுதியில் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதவிர, கோடிக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள ஏதுவாக, மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இவற்றில் லக்னோ நகருக்கு இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை சற்று அதிக அளவில் இருக்கும். தற்போது அயோத்தி, லக்னோ, ஜான்பூர் மற்றும் பனாரஸ் ஆகிய வழிகள் உள்பட குறுகிய தொலைவுகளுக்காக 11 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.