ட்ரம்ப் உத்தரவு அமல்: அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதைத் தடைசெய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அதனை அமல்படுத்தி அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்ட பதிவில், “மூன்றாம் பாலினத்தவர் இனி ராணுவத்தில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலின மாற்றம் தொடர்புடைய நடைமுறைகளைச் செய்வதோ, எளிதாக்குவதோ நிறுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பாலின டிஸ்போரியா பாதிப்புக் கொண்ட தனிநபர்களுக்கான அனைத்து சேர்க்கைக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலினமாற்றத்தை உறுதிப்படுத்துவது அல்லது எளிதாக்குவது ஆகியவைகளுடன் தொடர்புடைய திட்டமிடப்படாத மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவ நடைமுறைகளும் இடைநிறுத்தப்படுகின்றன.

பாலின டிஸ்போரியா உள்ளவர்கள் தன்னார்வத்துடன் நமது நாட்டுக்கு சேவையாற்றியுள்ளனர். அவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின டிஸ்போரியா என்பது, ஒரு தனிநபரின் உயிரியல் பாலினத்துக்கும் அவர்கள் வெளிப்படுத்த விரும்பும் பாலின அடையாளத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் எழும் மன உளைச்சல் உணர்வாகும்.

ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தை மட்டுமே அரசு அங்கீகரிக்கும் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்வதை தடை செய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கடந்த 2017 முதல் 2021 வரையிலான தனது முதல் பதவி காலத்திலும் ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சேவை செய்வதை தடை செய்தார். என்றாலும் இந்த உத்தரவினை அவர் முழுமையாக செயல்படுத்துவில்லை. அவரது நிர்வாகம் ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர்வதை தடுத்துவைத்திருந்தார். ஏற்கெனவே சேவையில் இருந்த மூன்றாம் பாலினத்தவரை அப்படியே அனுமதித்தது.

மூன்றாம் பாலினத்தவர்களை ராணுவத்தில் வைத்திருப்பதால் உண்டாகும் மிகப்பெரிய செலவுகள் மற்றும் இடையூறுகளின் அழுத்தம் இல்லாமல் அமெரிக்க ராணுவம் தீர்க்கமான மற்றும் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தியிருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த முடிவினைத் திரும்பப் பெற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.