திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் திடீரென்று மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளராக பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல் வகாபை கட்சி தலைமை நியமித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை கட்சி ரீதியாக கிழக்கு மாவட்டம், மத்திய மாவட்டம், மாநகர் மாவட்டம் என்று 3 ஆக பிரித்து நிர்வாகிகளை திமுக நியமித்திருக்கிறது. அதன்படி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலராக ஆவுடை யப்பனும், மத்திய மாவட்ட பொறுப்பாளராக டிபிஎம் மைதீன்கானும், மாநகர் மாவட்ட செயலராக சுப்பிரமணியனும் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மத்திய மாவட்ட பொறுப்பாளரை மாற்றி புதிய பொறுப்பாளராக அப்துல்வகாப் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல்வகாப் செயல்பட்டு வந்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்த பி.எம். சரவணன் மற்றும் அப்துல்வகாப் ஆதரவாளர்களுக்கு இடையே நிலவிய பனிப்போர் மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக அப்துல்வகாபை மாற்றிவிட்டு டிபிஎம் மைதீன்கானை கட்சி தலைமை நியமித்தது. தற்போது மறுபடியும் அப்துல்வகாபுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் கட்சிக்குள் அதிரடியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய மாவட்ட திமுகவை டிபிஎம் மைதீன்கான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வில்லை என்றும், அவரை தாண்டி சில நிர்வாகிகள் கட்சிக்குள் கோலோச்சி வந்ததும், மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல்வகாப் இருந்தபோது கட்சிக்குள் இருந்த கோஷ்டி பூசல் தற்போது மேலும் அதிகரித்து பல கோஷ்டிகள் உருவாகியிருப்பதும் உளவுத் துறை அறிக்கை மூலம் கட்சி தலைமையின் கவனத்துக்கு சென்றுள்ளது.
மேலும், டிபிஎம் மைதீன் கானுக்கு வயதாகிவிட்டதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. திருநெல்வேலியில் திமுக நிர்வாகிகளளை முதல்வர் சந்தித்து பேசியபோது, சரி யாக செயல்படாத ஒன்றிய, நகர நிர்வாகிகள் குறித்து வெளிப் படையாகவே எச்சரித்திருந்தார். கட்சியில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் என்று அப்போதே எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில்தான், டிபிஎம் மைதீன்கான் மாற்றப்பட்டி ருக்கிறார். இது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சிக்குள் திறம்பட செயல்படும் நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையை திமுக தலைமை மேற்கொண்டுள்ளது. அதன்படியே அப்துல் வகாப் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டையில் முதல்வரின் ரோடு ஷோவை அப்துல்வகாப் சிறப்பாக நடத்தியதும் தலைமையின் கவனத்துக்கு சென்றது. மேலும், திருநெல்வேலியில் கட்சியை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் முயற்சியாக அப்துல்வகாபை நியமிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவின் பரிந்துரையும் முக்கிய காரணமாக இருந்தது என்று கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. திருநெல்வேலியில் மாவட்ட அளவில் நிர்வாகி மாற்றம் நடந்துள்ள அதேநேரத்தில் ஒன்றிய, நகரங்களில் கட்சி நிர்வாகிகள் மாற்றமும் விரைவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.