லக்னோ: மகா கும்பமேளாவுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருவதால் அதனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசை, அம்மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “மகா கும்பமேளாவில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இப்போது கூட, பலர் மகா கும்பமேளாவிற்கு செல்ல திட்டமிடுகிறார்கள். ஆனால் அவ்வாறு செல்ல முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், மகா கும்பமேளாவின் கால வரம்பை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும்.
சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரள்வதை காண முடிகிறது. முந்தைய ஆண்டுகளில் மகா கும்பமேளா 75 நாட்களுக்கு நடைபெற்றன. எனவே, இம்முறையும் கால அளவை உத்தரப்பிரதேச அரசு நீட்டிக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜ் நகரை நோக்கிச் செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. ரயில் மார்க்கமாக மட்டுமல்லாது, சாலைகள், விமானங்கள் மூலமாகவும் ஏராளமான மக்கள் மகா கும்பமேளாவிற்குச் செல்கின்றனர். மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் பல கிலோமீட்டர்கள் தொலைவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கண்டு வருகின்றன. அதிகப்படியான கூட்டம் காரணமாக பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையம் தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மகா கும்பமேளாவில் இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கும்பமேளா நடைபெறும் பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவில் பங்கேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.