டெல் அவிவ்: பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மூவரை ஹமாஸ் தீவிரவாத இயக்கம் விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
கடந்த 2023, அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 48,219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேல் – ஹாமாஸ்கள் இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்தத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஹமாஸ், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட இருந்த 3 இஸ்ரேலியக் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விடும். ஹமாஸ்கள் இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் இன்று (பிப்.15) 3 ஆண் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவித்தனர். தெற்கு காசா பகுதியில் இருந்து ஐயர் ஹார்ன் (வயது 46), சாகுய் டெக்கல் சென்(36), அலெக்சாண்டர் (சாஷா) ட்ரூஃபனோவ் (29) ஆகியோரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். பிணைக் கைதிகளின் விடுதலைக்கு ஈடாக, இஸ்ரேல் 369 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கத் தொடங்கியது. இதில் கொடிய தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 36 பேரும் அடங்குவர்.
ஜனவரி 19 அன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இது ஆறாவது பரிமாற்றமாகும். சனிக்கிழமைக்கு முன்பு, போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின்போது 21 பிணைக் கைதிகள் மற்றும் 730 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலின் போது கடத்தப்பட்ட 251 பேரில், 73 பேர் காசாவில் உள்ளனர். அவர்களில் பாதி பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்தப் போரில் 48,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் எத்தனை பேர் ‘போராளிகள்’ என்பது தெரிவிக்கப்படவில்லை. 17,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான ஆதாரங்களை அது வழங்கவில்லை.
காசாவிலிருந்து சுமார் 20 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியற்றி, வேறு இடங்களில் அவர்களை குடியமர்த்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்த யோசனையை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. அதேநேரத்தில், பாலஸ்தீனியர்களும், அரபு நாடுகளும் இதனை நிராகரித்துள்ளன.