புதுடெல்லி: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை சமீபத்தில் அமெரிக்க அரசு திருப்பி அனுப்பிய விதம் ‘கொடூரமானது, மிகவும் கேவலமானது’ என்று பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உமா பாரதி, “சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்காவிலிருந்து கைவிலங்கிட்டு, கால்களில் விலங்கிட்டு அனுப்பி விதம் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மனிதகுலத்தின் மீதான கறை. இந்தக் கொடூரமான மனப்பான்மை மற்றும் வன்முறையை அங்குள்ள சிவப்பிந்தியர்கள் மற்றும் ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்கள் மீது பல முறை காட்டியுள்ளனர்.
அவர்களை (நாடு கடத்தப்பட்டவர்கள்) விமானத்தில் கைகளில் விலக்கு மாட்டி அனுப்பி வைத்தது அமெரிக்க அரசின் கொடூரமான மற்றும் மனித தன்மையற்ற நிலையை காட்டுகிறது. ஒரு நாட்டுக்குள் சட்டவிரோகமாக நுழைவது குற்றமே. ஒவ்வொரு நாடும் அதன் சட்டத்துக்கு ஏற்ப தண்டனை முறைகளைக் கொண்டுள்ளன. ஆனால் இதுபோன்ற கொடூரம் மிகப் பெரிய பாவம்” என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய பின்பு உமா பாரதியின் இந்தக் கருத்து வந்துள்ளது. அமெரிக்காவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 119 இந்தியர்கள் விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்களில் நாடு கடத்தப்படுகின்றனர். இந்த 2 விமானங்கள் 119 இந்தியர்களையும் ஏற்றிக்கொண்டு இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுபவர்களில் அதிகபட்சமாக 67 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து ஹரியாணா (33), குஜராத் (8), உத்தர பிரதேசம் (3), மகாராஷ்டிரா (2), கோவா (2), ராஜஸ்தான் (2) இமாச்சல் மறறும ஜம்மு-காஷ்மீர் (தலா ஒருவர் ) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, 104 இந்தியர்கள் அடங்கிய முதல் குழு, அமெரிக்காவில் இருந்து கடந்த 5-ம் தேதி அமிர்தசரஸ் நகருக்கு வந்தது. அவர்கள் கைவிலகிடப்பட்டும், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டும் கொண்டுவரப்பட்டனர். இது தேசிய அளவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்ததன் பின்னணியில் இன்று இரண்டாவது குழு வர உள்ளதால் அவர்கள் எவ்வாறு அழைத்து வரப்படுவார்கள் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.