செங்கல்பட்டு: “பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அதிமுக அரசின் ஆட்சியில், தமிழகம் பல துறைகளில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. இன்றைய ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது” என்று சிட்லபாக்கம் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகள், திமுக அரசின் அவலங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன். பின்னர் செய்தியாளர்களிடம் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கூறியது: “பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அதிமுக அரசின் ஆட்சியில், தமிழகம் பல துறைகளில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.
இன்றைய ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. ரூபாய் ஆயிரம் மட்டும் கொடுத்து அதிமுக அரசின் பல திட்டங்களை நிறுத்தியது மட்டுமின்றி, பொது மக்களிடமிருந்து சொத்து வரி, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் வரை பொதுமக்களிடமிருந்து சுரண்டுகின்றனர்.
கரோனா காலகட்டத்தில் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் ரேஷன் கடைகளில் விலை இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டன. கரோனா என்னும் கொடிய நோயிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. ஆனால் இன்று பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில் கூட மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அம்மா உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிமுக அரசு செயல்படுத்திய மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கும் லேப்டாப் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டதுடன் பள்ளி கல்லூரிகள் நுழைவு வாயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக, மாணவர்கள் கையில் கிடைக்கிறது. இதனால் மாணவ சமுதாயம் சீரழிந்து வருகிறது. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திமுக அரசு குற்றங்களை தடுக்க தவறிவிட்டது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை.
மாறாக அரசியலில் தன் குடும்ப வாரிசுகளை கொண்டு வந்து பணத்தையும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கொள்ளையடிப்பதை திமுக அரசு வழக்கமாகி கொண்டுள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றியது இல்லை. மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2026-ல் திமுக-வின் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் மக்கள் விரோத அரசுக்கு முடிவு கட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமைய வேண்டும். அதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று பேசினார்.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.ஜி.கே.கோபி கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அவை தலைவர் ஏ.எம்.பொன்னுசாமி, நகர நிர்வாகிகள் தசரதன், வேலு என்கிற வேலாயுதம், பாளையம், பார்த்தசாரதி, யூசுப், வினோத்குமார் உள்ளிட்ட மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வேலூர் பகுதியில் 16-ம் தேதி நடைபெற உள்ள இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநாட்டை முன்னிட்டு மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட நின்னைகரை பகுதியில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.