மும்பை: கட்டாய மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் போன்றவற்றை தடுக்க 7 பேர் சிறப்பு குழுவை மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பில் உள்ளது. இங்கு கட்டாய மதமாற்றம் மற்றும் காதல் என்ற பெயரில் (லவ் ஜிகாத்) மதமாற்றம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க வேண்டும். அதற்காக மகாராஷ்டிராவில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த காலங்களில் கூறி வந்தார். இந்நிலையில், கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் போன்ற நடவடிக்கைகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க டிஜிபி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் போன்றவற்றை தடுக்க 7 பேர் குழு நியமிக்கப்படுகிறது. அதில் டிஜிபி தவிர உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை, சட்டம் நீதித்துறை, சமூக நீதித் துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 6 பேர் இடம்பெறுவார்கள். இக்குழுவினர் மகாராஷ்டிராவில் தற்போதுள்ள சூழ்நிலை. லவ் ஜிகாத் பற்றி வரும் புகார்களை கையாளும் முறை, கட்டாய மதமாற்றம், மற்ற மாநிலங்களில் இது தொடர்பாக அமலில் உள்ள சட்டங்கள், புதிய சட்டத்துக்கான விதிமுறைகள், புதிய சட்டத்தால் ஏற்படும் தாக்கங்கள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அரசு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமாஜ்வாதி எம்எல்ஏ ராய்ஸ் ஷேக் கூறும் போது. “லவ் ஜிகாத் குறித்து மகாராஷ்டிர அரசிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லை. ஆனால் கட்டாய மதமாற்றம், ஜிகாத் என்றெல்லாம் கூறி அரசியல் செய்கிறது. லவ் ஜிகாத் குறித்து மகாராஷ்டிர போலீஸில் எந்த புகாரும் வரவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த புள்ளிவிவரமும் இல்லை” என்றார்.