அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கை,கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர். ஆனால் இது குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. இதை விமர்சிக்கும் விதமாக விகடன் ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டது. இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் விகடன் வாசகர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதில் சில சிக்கல்களை சந்திப்பதாக சொல்கின்றனர். ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டப் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “விகடன் இணையதளம் முடக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்காவில் இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்தும், ட்ரம்ப் முன் மோடி மௌனம் காத்ததை அம்பலப்படுத்தும் ஒரு கார்ட்டூன் காரணமாக விகடன் தடைசெய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசுவோம். இந்தத் தாக்குதலுக்கு எதிராக உறுதியாக நிற்போம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்தியர்களைக் கை, கால்களில் விலங்கிட்டு போர்விமானத்தில் அழைத்து வந்த அமெரிக்க நிர்வாகத்தை கண்டிக்காமல் கோழைத்தனமாக நடந்துகொண்டது மோடி நிர்வாகம். இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் விகடனில் வெளிவந்துள்ள கேலிச்சித்திரத்திற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. தன் குடிமக்களை கண்ணியமாக நடத்துங்கள் என்று அமெரிக்காவை கேட்கத் துணிவற்றவர்கள், தன் நாட்டில் உள்ள அனைவரும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி நடக்க மறுப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிறார்கள். விகடனின் மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமூக செயற்பாட்டாளர் சுந்தர்ராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியர்கள் கைவிலங்கிட்டு விமானங்களில் திருப்பி அனுப்பப்டுவதை தடுக்க, பிரதமர் அமெரிக்க அதிபரை சந்தித்தபோது கூட கேட்கவில்லை என்பதை கார்ட்டூன் போட்டு காட்டியுள்ளது விகடன். இதில் எந்த தவறும் இல்லை. பிரதமராக நேரு இருந்தபோது கார்டூனிஸ்ட் சங்கர் வரைந்த கார்டூன் விவாதத்தை கிளப்பியது, அதற்கு பதில் கூறும் விதமாக , “Don’t Spare me Sankar” என்று சொன்னார் ஜனநாயகவாதி நேரு. கைவிலங்கு பூட்டி திருப்பி இந்தியர்களை அனுப்பும் போது உலக அரங்கில் ஏற்படாத தலைகுனிவு ஒன்றும் ஒரு கார்ட்டூனில் ஏற்பட்டுவிடாது. நேரு அமர்ந்த நாற்காலி என்பதால் கொஞ்சமாவது் புத்தியோடு…” எனப் பதிவிட்டிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி நிர்மல் குமார், “நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் விகடன் இணையதளம், மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது . எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. நடுநிலையோடு செயல்படும் விகடன் போன்ற ஊடகங்கள் மீதான இந்த பாசிச அடக்குமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது…” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஊடகவியலாளர் குணசேகரன், “கருத்துரிமை காப்போம்! விகடன் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் எதுவும் கேட்காமல், அதிகாரபூர்வமற்ற வகையில் குறுக்குவழியில் இணையதளத்தை முடக்கி இருப்பது ஏற்புடையதல்ல. அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது, அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையைப் பாதுகாப்போம்! ஊடக சுதந்திரத்தை காக்க துணைநிற்போம்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.