ரோம்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பிரார்த்தனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.
இருப்பினும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட பரிசோதனைகளில் அவருக்கு சுவாசக்குழாய் தொற்று மற்றும் லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. வாடிகன் தேவாலயத்தில் வரும் திங்கட்கிழமை வரை போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக வாடிகன் தேவாலய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி கூறுகையில், போப் பிரான்சிஸ் நேற்று இரவு நன்றாக தூங்கினார் எனவும், மருத்துவ சிகிச்சைக்கு இடையே இன்று காலை உணவு எடுத்துக் கொண்ட அவர், செய்தித்தாள்களை வாசித்தார் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், வாடிகன் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் கன்னியாஸ்திரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தாலியை சேர்ந்த கன்னியாஸ்திரி ரபேலா பெட்ரினி, கத்தோலிக்க திருச்சபையின் தாயகமான ரோமில் உள்ள 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த பதவியில் இருந்து வரும் 75 வயதான கார்டினல் பெர்னாண்டோ வெர்கெஸ் மார்ச் 1-ந்தேதி ஓய்வு பெறும் நிலையில், அந்த பதவியை ரபேலா பெட்ரினி ஏற்க உள்ளார். இவர் இதற்கு முன்பு வாடிகன் நிர்வாகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.