பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்களுக்கு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், பஞ்சதத்துவ பவுண்டேசன் என்ற பெயரிலான என்.ஜி.ஓ. அமைப்பின் நிறுவனர் மற்றும் தண்ணீர் மனுஷி என அழைக்கப்படும் ஷிப்ரா பதக் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்படி, நாக சாதுக்கள் இதில் கலந்து கொண்டு ஆறுகளை பாதுகாப்போம் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதேபோன்று ஆண்டுதோறும் ஒரு மரக்கன்று நடுவோம் என்றும் அதனை பாதுகாப்போம் என்றும் அவர்கள் உறுதிமொழியாக எடுத்து கொண்டனர்.
இதேபோன்று, நிகழ்ச்சியில் பேசிய அம்ரிதேஷ்வர் மகாதேவ் பீடாதீஷ்வர் சகதேவானந்த் கிரி கூறும்போது, மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். அன்னை கங்கையின் கண்ணியம் பராமரிக்கப்பட வேண்டும். இது அவர்களுடைய கடமையாகும் என கூறினார்.
சமூக மக்கள் அவர்களுடைய கலாசாரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மறந்து வருகின்றனர் என்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. மக்கள் பாவங்களை கழுவுவதற்காக வருகின்றனர். ஆனால், பாவங்களை செய்து விட்டு செல்கின்றனர் என வேதனையை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அவர், இது ஒரு சுற்றுலா தலம் அல்ல. ஆனால், மதுபாட்டில்கள், ஆடைகள் மற்றும் மாசுபாடு என்பது பல்வேறு இடங்களிலும் பரவி காணப்படுகிறது. அதேநேரத்தில், இரவு என பாராமல் அரசு அதிகாரிகள் தூய்மைக்காக பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இதேபோன்று பதக் கூறும்போது, கோடிக்கணக்கான மக்கள் பாவ விமோசனம் பெறுவதற்காக கும்பமேளாவுக்கு வருகிறார்கள். கங்கையில் குளித்த பின்னர், அவர்கள் குப்பைகளை விட்டு விட்டு செல்கிறார்கள் என்றார். ஆறுகளை தூய்மை செய்யும் முயற்சியில் நாக சாதுக்கள் முக்கியதொரு பங்கு வகிக்க முடியும். ஏனெனில், சனாதன தர்மத்திற்காக அவர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்கள் என்று பேசியுள்ளார்.