புதுடெல்லி: வடக்கு, தெற்கு பகுதிகளின் சங்கமத்தை வலுப்படுத்தியவர் அகத்திய முனிவர் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழாரம் சூட்டினார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணாசியின் நமோ படித்துறையில் 3-வது ஆண்டாக நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ் 3.0) நேற்று தொடங்கியது. விழாவை தொடங்கி வைத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: வாராணசியில் கேடிஎஸ் மூன்றாவது பதிப்பை ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சங்கமத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்.
இந்த சங்கமம் மகா கும்பமேளாவுடன் ஒத்துப்போவது மகிழ்ச்சி. இந்த சங்கமத்தின் கருப்பொருளாக அகத்திய முனிவர் இருக்கிறார். இந்தியாவின் வளமான அறிவு மற்றும் மரபுகளை பிரதிபலிக்கிறார். வடக்கு, தெற்கு, சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளின் சங்கமத்தை வலுப்படுத்துவதில் அகத்திய முனிவரின் ஆழமான பங்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும் போது, “தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரத்தையும், மரபுகளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் எங்கு சென்றாலும் வாழ்க்கையை வளப்படுத்துகின்றனர். உ.பி. முதல்வர் யோகியிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்படி தமிழகத்திலிருந்து வந்தவர்களுக்கு மகா கும்பமேளா வில் புனிதக்குளியலுக்கும், அயோத்யாவின் ராமர் கோயிலில் தரிசனமும் செய்து வைக்கப்படுகிறது. இதுபோல், முதன் முறையாக காசி தமிழ்ச் சங்கமத்தில் நடைபெறுகிறது” என்றார்.
மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான பழங்கால தொடர்புகளை மீண்டும் கண்டு பிடித்து உறுதிப்படுத்தி கொண்டாடுவதே காசி தமிழ்ச் சங்கமத்தின் நோக்கமாகும். தமிழ்நாட்டையும் காசியையும் இது இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை யில் கூறியபடி. உலகம் முழுவதிலும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையங்கள் அமைத்து வருகிறார் பிரதமர் மோடி. திருவள்ளுவர் புகழை இந்தியாவில் மட்டும் அன்றி ஐ.நா சபை உள்ளிட்ட உலகம் முழுவதிலும் ஆற்றும் தன் உரையிலும் அவர் திருவள்ளுவர் புகழை பேசி வருகிறார். பாரதியாருக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கையும் அமைத்துள்ளார்” என்றார்.
நிகழ்ச்சியின் இடையே கேடிஎஸ் 3.0 குறித்த திரைத் தொகுப்பு திரையிடப்பட்டது. தமிழகத்தின் கலைஞர்களால் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை மேடையில் இருந்தபடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். தொடக்க நிகழ்ச்சியில் உபி.யின் மூத்த அமைச்சர்களான ரவீந்திர ஜெய்ஸ்வால், தயாளு மிஸ்ரா, மத்திய கல்வி துறையின் செயலாளர் வினீத் ஜோஷி, சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 41 இந்தி மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. இதில், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்கணக்கு, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல் உரை, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை இடம் பெற்றன.