ஊக்கமருந்து பிரச்சினை: 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் சின்னெருக்கு 3 மாதம் தடை

லண்டன்,

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரராக வலம் வரும் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த மாதம் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனிலும் வெற்றி பெற்றிருந்தார். 23 வயதான சின்னெர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார்.

அவரிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மற்றும் ரத்த மாதிரியை பரிசோதித்த போது அதில் குளோஸ்ட்போல் என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து லேசாக இருப்பது கண்டறியப்பட்டது. 8 நாளுக்கு பிறகு மீண்டும் நடந்த சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜன்னிக் சின்னெர் அப்பீல் செய்த போது, போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க டென்னிஸ் சங்கம் அனுமதி அளித்தது. இது தொடர்பான விசாரணையின் போது சின்னெர் ‘எனது பிசியோதெரபிஸ்ட் கியாகோமா நல்டி, விரலில் அடைந்த காயத்துக்கு ஸ்பிரே அடித்திருந்தார். பின்னர் மருந்து தடவப்பட்ட அந்த கையால் எனது உடலில் ‘மசாஜ்’ செய்தார்.

அதன் மூலம் அந்த மருந்தின் தாக்கம் எனது உடலில் பரவிவிட்டது. அந்த மருந்தில் தான் குளோஸ்ட்போல் இருந்துள்ளது. மற்றபடி வேண்டுமென்றே எந்த ஊக்கமருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கூறினார். அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் நேர்மை கமிட்டி அவரை தண்டனையின்றி விடுவித்தது.

இந்த நிலையில் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் அப்பீல் செய்தது. சிம்னெருக்கு குறைந்தது ஓராண்டாவது தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதற்கிடையே, சிம்னெரும், உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையும் பரஸ்பரமாக பேசி முடிவுக்கு வந்துள்ளனர். இதன்படி அவர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி கண்டதால் அதற்கு 3 மாதங்கள் இடைநீக்கத்துக்கு உட்பட வேண்டும் என்று ஊக்கமருந்து தடுப்பு முகமை பரிந்துரைத்தது. அதனை அவரும் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் 11 மாதங்களாக நீடித்த இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

3 மாத இடைநீக்கம் பிப்ரவரி 9-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை கணக்கிடப்படுகிறது. இந்த காலத்தில் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இண்டியன்வெல்ஸ், மியாமி ஆகிய முக்கியமான சர்வதேச போட்டிகளை அவர் தவற விடுகிறார். தடை காலம் முடிந்து மே 7-ந்தேதி ரோமில் தொடங்கும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.