காமெடி கதாபாத்திரங்களிலும், முன்னணி கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு.
இன்று காலை அவர் படப்பிடிப்புக்குச் செல்லும்போது அவருடைய கார் விபத்துக்குள்ளானதாகவும் அதனால் அவரும் அவருடைய உதவியாளரும் பலத்த காயமடைந்ததாக பல்வேறு செய்திகள் வெளியானது. அப்படி எந்த விபத்துக்கும் எனக்கு ஏற்படவில்லை என யோகி பாபு தற்போது விளக்கமளித்திருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால், நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது.

அது முற்றிலும் தவறு, என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அவர்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.