புதுடெல்லி: டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் 157 பேர் அடங்கிய மூன்றாவது குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமிர்தசரஸ் வந்தடைகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்துவரப்படும் நாடுகடத்தப்படுவர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள். முன்னதாக, சனிக்கிழமை மாலை அமெரிக்க ராணுவ விமானத்தில் 119 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டு அமிர்தசரஸ் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து இந்த மூன்றாவது குழு நாடுகடத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வந்து இறங்கிய 119 பேரில், 67 பேர் பஞ்சாப்பையும், 33 பேர் ஹரியானாவையும் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களில் 8 பேர் குஜராத், 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா இரண்டு பேர் கோவா மற்றும் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, சனிக்கிழமை இந்திய வந்திறங்கிய அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் உறவினர்களான சந்தீப் மற்றும் பிரதீப் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்யதனர். இவர்கள் இருவரும் பஞ்சாப்பின் பட்டியாலாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களாவர். அந்தக் கொலை வழக்கில் அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படிருந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக பிப்.5-ம் தேதி, அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட முதல் குழு இந்தியர்கள் 104 பேரை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வந்தடைந்தது. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்கள் அனைவரும் அமிர்தசரஸ் விமானநிலையத்திலேயே இறக்கி விடப்படுகின்றனர்.
இதற்கு அம்மாநில முதல்வர் பகவத் மான் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுடைய புனித நகரத்தை (அமிர்தசரஸ்) நாடுகடத்தல் மையமாக மாற்றாதீர்கள். அமிர்தசரஸ் நகரம் அதன், தங்கக்கோயில், துர்கினியா மந்திர், ராம் தீரத் கோயில், ஜாலியன்வாலா பாக் மற்றும் கோபிந்த்கர் கோட்டைக்கு பெயர் பெற்றது.
நாடுகடத்தப்படுபவர்கள் வாட்டிகன் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களை அழைத்துக்கொண்டு (நாடுகடத்தி) வரும் விமானத்தை வாட்டிகனில் தரையிறங்க அனுமதிப்பார்களா?. நாட்டில் பல விமானநிலையங்கள் உள்ளன. இந்தியர்களை நாடுகடத்தி வரும் விமானத்தை அவற்றில் ஒன்றில் தரையிறக்கலாம்.”என்று தெரிவித்தார்.