முனிச்,
ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 14-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் (இன்று வரை) நடந்த பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான சவால்கள் பற்றி பேசப்படும்.
இதில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதேபோன்று, நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், அமெரிக்க செனட் உறுப்பினர் எலிஸ்ஸா ஸ்லாட்கின், வார்சா மேயர் ரபால் ஜாஸ்கோவ்ஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமெரிக்க செனட் உறுப்பினரான ஸ்லாட்கின் பேசும்போது, ஜனநாயகம் உங்களுடைய மேஜை மீது உணவை கொண்டு வந்து வைக்காது என கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், செனட் உறுப்பினர் அவர்களே, உங்கள் மேஜை மீது வந்து, ஜனநாயகம் உணவை வைக்காது என நீங்கள் கூறுகிறீர்கள். உண்மையில், உலகின் என்னுடைய பகுதியில் ஜனநாயகம் அதனை செய்கிறது. நாங்கள் ஜனநாயக சமூகத்தில் இன்று இருக்கிறோம். நாங்கள் 80 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உணவை அளித்து வருகிறோம் என கூறினார்.
அதனால், மக்கள் எவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் வயிறு எவ்வளவு நிரம்பியிருக்கிறது என்பதே முக்கிய விசயம். உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான உரையாடல்கள் இருக்கும். எனவே, இதுவே உலகளாவிய நடைமுறையாக இருக்கும் என நீங்களாக நினைத்து கொள்ளாதீர்கள் என்றார்.
சில பகுதிகளில் அது நன்றாக வேலை செய்யும். சில பகுதிகளில் அப்படி இருக்காமல் போகலாம். ஏன் அப்படி இல்லை? என மக்கள் அதனை பற்றி நேர்மையுடன் உரையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.