புதுடெல்லி: குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட், “மாநிலங்களுக்கு இடையிலான குழந்தை கடத்தல் வழக்குகளை சிபிஐ போன்ற தேசிய அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
இதையடுத்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி தனது வாதத்தில், “கடந்த 2020 முதல் காணாமல்போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மத்திய, மாநில போலீஸார் கண்டுபிடித்து விட்டனர். என்றாலும் 36 ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ‘கோயா-பாயா’ போர்ட்டலை தவிர, புகாருக்கு பிறகு 4 மாதங்கள் வரை குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அந்த வழக்குகளை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுகளை மேம்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தலா ரூ.100 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
காணாமல் போன குழந்தைகளில் அதிகபட்சமாக 58,665 பேர் ம.பி.யை சேர்ந்தவர்கள், இவர்களில் 45,585 பேரை காவல்துறை கண்டுபிடித்தது. என்றாலும் 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.