மதுரை: பெங்களூரில் இருந்து தனியார் விமானம் 172 பயணிகளுடன் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், அந்த விமானம் இரவு 7.45 மணிக்கு அவரசமாக மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமானத்தில் வந்த பயணிகளை மதுரை விமான நிலையத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அந்த விமானம் 8.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் திருவனந்தபுரம் சென்றது.
இதேபோல மும்பையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விமானமும் இரவு மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கி மீண்டும் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டுச்சென்றது. இதுகுறித்து மதுரை விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், “தனியார் விமானம் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மேற்குவங்க மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உள்பட 172 பயணிகளுடன் புறப்பட்டது.
இதற்கிடையே திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு பிரச்சினையால் இந்த விமானம் தரை இறங்க முடியாமல் மதுரையில் தரை இறங்கியது. பின்பு திருவனந்தபுரத்தில் பிரச்சினை சரிசெய்யப்பட்டவுடன் அந்த விமானம் மீண்டும் திருவனந்தபுரத்திற்கு சென்றது.
இதேபோல மும்பையில் இருந்து திருவனந்தபுரம் நேக்கி சென்ற மற்றொரு விமானமும் மதுரையில் தரை இறங்கி பின்பு அரை மணிநேர தாமதத்திற்குப்பின் எரிபொருள் நிரப்பி மீண்டும் புறப்பட்டுச்சென்றது” என தெரிவித்தனர்.