புதுடெல்லி: டெல்லி மேயர் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இது மேலும் ஓர் அடியாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்து பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அனிதா பசோயா (ஆன்ட்ரூஸ் கஞ்ச்), நிகில் சப்ரானா (ஹரி நகர்), தரம்வீர் (ஆர்கேபுரம்) ஆகியோர் நேற்று அக்கட்சியிலிருந்து விலகினர். இதைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வீரேந்திர சச்தேவா அறிவித்தார்.
டெல்லி மாநகராட்சி (எம்சிடி) மேயர் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கவுன்சிலர்கள் விலகியுள்ளது அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆத் ஆத்மி கட்சிக்கு மேலும் ஓர் அடியாகப் பார்க்கப்படுகிறது.