லக்னோ,
உத்தரபிரேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜை நோக்கி படையெடுக்கின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரெயில் அமேதியில் உள்ள குரு கோரக்நாத் தாம் ரெயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. இந்த ரெயிலில் ஏறுவதற்காக 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
ஆனால் ரெயிலுக்குள் இருந்த பயணிகள் ரெயில் பெட்டிகளின் கதவுகளை உள்பக்கமாக பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளால் ரெயிலில் ஏற முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கற்கள் உள்ளிட்டவற்றை வீசி ரெயில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 ரெயில் பெட்டிகள் சேதமடைந்தன.