பால் என்பது அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்று. மனிதர்களுக்கு மட்டுமல்லாது பாலூட்டி விலங்குகளுக்கும் பால் என்பது இன்றியமையாதது.
உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் தருகிறது என்று சொன்னால், உங்களுக்கு கேட்கவே ஆச்சர்யமாக இருக்கலாம். ஆப்பிரிக்க காண்டாமிருகம் என்று அழைக்கப்படும் கருப்பு காண்டாமிருகம் தான், கருப்பு நிறத்தில் பால் தருகிறது. இந்த வகை காண்டாமிருகங்களின் பாலின் 0.2 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு உள்ளதாம். தண்ணீரைப்போல இருக்கும் இந்த காண்டாமிருகத்தின் பால், கருப்பு நிறத்தில் இருக்கிறது.

புல்லை மேயும் வெள்ளை காண்டாமிருகங்களைப் போலல்லாமல், கருப்பு காண்டாமிருகங்கள், அவற்றின் கூர்மையான மேல் உதடுகளால், மரங்கள் மற்றும் புதர்களில் இருந்து உணவைப் பறிக்கின்றன.
கருப்பு காண்டாமிருகங்கள் வெப்பமான மதிய நேரங்களில் ஓய்வெடுக்கின்றன, குளிர்ச்சியான நேரங்களில் உணவை தேடுகின்றன. இரவின் குளிரான நேரங்களிலும் அதிகாலையிலும் அவை அதிக சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அழிவின் விளிம்பில் உள்ளவையாக பட்டியலிடப்பட்டுள்ள கருப்பு காண்டாமிருகங்கள், வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இந்த வகை காண்டாமிருகங்களுக்காக எடுக்கப்படும் பாதுகாப்பு முயற்சிகள் அவற்றின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதையும், கிளையினங்கள் மறைந்து போவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.