திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்

மதுரை : “திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உடனடியாக இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் எல் முருகன் திங்கள்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம். 2021 வெற்றிவேல் யாத்திரை தமிழக முழுவதும் பாஜக சார்பாக நடத்தப்பட்டது. அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அறுபடை வீடுகளுக்கும் நான் வந்திருந்தேன். இன்று இந்த முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்து விட்டு, மலை மீது உள்ள காசி விஸ்வநாதரையும் தரிசிக்க உள்ளோம்.

சமீபகாலமாக இந்து மக்கள் பலர் சைவ வழிபாடு செய்கிற இந்தப் பகுதியில் விரும்பத்தகாத சம்பவங்களை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1931-ல் வந்த நீதிமன்ற தீர்ப்பிலேயே ஒட்டுமொத்த மலையில் 33 செண்டை தவிர மொத்த மலையும் முருகப்பெருமானுக்கு சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக 1983-ல் வருவாய் ஆவணங்களில் இருந்த பதிவுகளில் தமிழக அரசு சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை என்று தான் இருக்க வேண்டும். 30 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

1994-ம் ஆண்டு தீர்ப்பின் படி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற ஆணையை இந்து அறநிலையத்துறை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும். உலகெங்கும் முருகப்பெருமானை வழிபடுகிற பக்தர்கள் சார்பாக இந்த கோரிக்கையை வைக்கிறேன். உடனடியாக இந்து அறநிலையத்துறை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கோயில் ஒரு சைவ திருத்தலம். கருப்பசாமி, மதுரை வீரன் போன்ற சாமிகளுக்கு நாம் பலியிடுவது வழக்கம்தான். ஆனால் அது கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை போற்றுவதற்கு பலியிடுவது வழக்கம். எந்த ஒரு முருகப்பெருமான் இருக்கிற சைவ, வைணவ தளங்ககளில் பலியிடும் சம்பவம் கிடையாது. அப்படி இருக்கும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடத்த முன்வந்து இருந்தால் அல்லது நடத்தியவர்கள் மீது உடனடியாக தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு எங்கள் தலைவர்களை வீட்டிலேயே கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த பகுதியில் நடைமுறை என்னவோ அதை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் இந்து முன்னணி சார்பாக மாநிலத் தலைவர் போராடிக் கொண்டே இருக்கிறார். நமது உரிமை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

தாய்மொழியை ஊக்குவிக்கிற கல்விக் கொள்கை.. மேலும்” “தேசிய கல்விக் கொள்கை ஒரு நாளில் கொண்டு வரப்பட்டது அல்ல. 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய காலக்கட்டத்துக்கு உலக அளவில் உள்ள சந்தை நிலவரத்தை வைத்து நாம் போட்டி போடும் அளவுக்கு நமது இளைஞர்களை தயார் செய்வதற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதேபோல புதிய கல்விக் கொள்கை ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும் மாணவர்களின் பங்களிப்பை அதில் கொடுப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிற கல்விக் கொள்கை. தாய்மொழியில் தான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை.” என்று அவர் கூறினார்.

மனமுருகி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்த மத்திய அமைச்சர்: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோயிலிலும் தரிசனம் செய்தார். பின்னர் மலை மீது வேல் நிகழ்ச்சி நடைபெறும் குளத்தை பார்வையிட்டு சிவலிங்கத்தை தரிசனம் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.