புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு கடந்த 13-ம் தேதியன்று மாநிலங்களவையில் தமிழிலேயே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக அளித்த விளக்கம் அடங்கிய வீடியோ பதிவுகள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
முன்னதாக, மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, “மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், இந்த பட்ஜெட்டில் அதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. 100 நாள் வேலை உறுதித் திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம் ஆகியவற்றுக்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, திமுக உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமாக பதில் அளித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்துக்கு நிறைய செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மத்திய துறை திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரூ.63,246 கோடி திட்டம் இது. இதில், 65% மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம் ஜனவரி 20, 2019 அன்று தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நான் கேள்விப்பட்டேன். பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தை பிரதமர் மோடி அறிவித்தபோது முதல் வழித்தடம் தமிழ்நாட்டுக்குத்தான் வழங்கப்பட்டது. அதன் பிறகே உத்தரப் பிரதேசத்துக்கு வழங்கப்பட்டது. எனவே, பாதுகாப்பு தொழில்துறை வழித்திடத்தை எடுத்துக்கொண்டால் அதில் தமிழ்நாட்டுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
லட்சிய மாவட்டத்தின் கீழ், பிரதமரின் மித்ரா மெகா ஜவுளி பூங்கா திட்டம் விருதுநகருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது” என தெரிவித்தார்.
அப்போது பேசிய திமுக எம்பிக்கள் சிலர், “ஆனால், இத்திட்டம் இன்னும் முடிவடையவில்லை” என சத்தமாகக் கூறினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “ஒவ்வொன்றைப் பற்றியும் துருவி துருவி கேள்வி கேட்கும் இவர்கள், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது என்ன செய்தார்கள்? காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. திமுக என்ன செய்தது?
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கினார். தடை இருக்கட்டுமே என பிரதமர் மோடி நினைக்கவில்லை. இத்தனைக்கும், ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியபோதும், ஜல்லிக்கட்டு நடக்க மோடி அரசு வழி வகை செய்தது. ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசே சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என மோடி அரசு தெரிவித்தது. காங்கிரஸ் தலைமையிலான அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது திமுக எங்கே போனது? ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று காங்கிரஸ் கட்சியைப் பார்த்து ஏன் கேட்கவில்லை?
எப்போது பார்த்தாலும் மோடிதான் தமிழகத்துக்கு விரோதி என்று சொல்வது தவறு. அமைதியாக அமர்ந்து சொல்வதை கேளுங்கள். மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள். மன திடத்தோடு தமிழில் நான் சொல்கிறேன். அதை கேட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் போய் சொல்லுங்கள்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அப்போது, திமுக எம்பிக்கள் மீண்டும் கூச்சலிட்டனர். நிதி அமைச்சர் இவ்வாறு பேசலாமா என திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “எனக்கு எதிராக நீங்கள் என்னவேண்டுமானாலும் பேசுவீர்கள். நான் அமைதியாக இருக்க வேண்டுமா? அவையின் துணைத் தலைவரிடம் அனுமதியோடு நான் பேசுகிறேன். நான் பேசக் கூடாது என நீங்கள் சொல்ல முடியாது. சிவா, காலையில் இருந்து நான் பார்க்கிறேன். நீங்கள் நியாயத்தைப் பேசுவதில்லை. மிகுந்த மன்னிப்போடு நான் சொல்கிறேன்” என குறிப்பிட்டார்.
மீண்டும் தமிழகத்துக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “மெட்ரோ ரயில் திட்டம் குறித்து சிவா பேசினார். அதற்கு நான் பதில் அளிக்கிறேன். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை மாநில அரசே மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது. இது மாநில அரசு எடுத்த முடிவு. ஆனால், கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட்ட உடன் திமுக அரசு, மத்திய அரசை குறை கூறியது. தமிழக முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, அந்த திட்டத்தை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
2014 முதல் தமிழ்நாட்டில் 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரத் மாலா திட்டத்தின் கீழ் 5 பசுமை வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சேலம் விமான நிலையம் உடான் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (கட்டம்-1) ரூ.1,260 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 12 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 59 லட்சம் வீட்டு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 89 லட்சம் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 78 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,350 பிரதமரின் மருந்தகங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 1.6 கோடி ஜன் தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. 5.7 கோடி முத்ரா கணக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.