என் முகத்தை கூட உங்களால் பார்க்க முடியாது – விராட் கோலியின் ஓய்வு திட்டங்கள்!

Virat Kohli Retirement: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த வீரருமான விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்துள்ளார். பல போட்டிகளை தனியாளாக இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 123 டெஸ்ட், 297 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 27,000க்கும் அதிகமான சர்வதேச ரன்கள், 80க்கும் அதிகமான சதங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தான் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபித்துள்ளார்.

ஓய்வு திட்டங்கள்?

சர்வதேச கிரிக்கெட் தாண்டி ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பான ஆவரேஜ் வைத்துள்ளார் விராட் கோலி. 2008 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். மேலும் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு உங்களால் என்னை பார்க்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்காக கொடுத்த ஒரு நேர்காணலில் உங்களில் ஓய்வுக்குப் பிறகு என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இப்படி பதில் அளித்துள்ளார்.

உங்களால் என்னை பார்க்கவே முடியாது – கோலி

“அது மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக எங்கள் வாழ்க்கைக்கு ஒரு இறுதி தேதி உள்ளது. அதனால் நான் அதை பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. ‘ஓ, நான் இதை குறிப்பிட்ட நாளில் செய்திருந்தால் என்ன’ என்று நினைத்து எனது வாழ்க்கையை முடிக்க விரும்பவில்லை. ஒரு விளையாட்டு வீரராக ஓய்வு என்பது அனைவருக்கும் இருக்கும். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உங்களால் என்னை பார்க்கவே முடியாது. அதனால் நான் விளையாடும் வரை என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் என்னைத் தொடர வைக்கிறது” என்று கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி

தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. துபாயில் வரும் 20ஆம் தேதி இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. 2027 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் வருவதற்கு இன்னும் நாட்கள் உள்ளது என்பதால் அதுவரை பிசிசிஐ இவர்களை அணியில் வைத்திருக்காது என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.