சென்னை: இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை, சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.1,893 கோடியில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 87 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி அடைந்துள்ள வளர்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அந்தளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி வளர்ச்சியை திமுக அரசின் பங்களிப்பை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. சென்னை மாநகராட்சி மீது கருணாநிதிக்கு எந்தளவுக்கு பாசமும் நெருக்கமும் இருந்ததற்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அண்ணா பரிசளித்த மோதிரம்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருணாநிதியிடம், “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற பரிசுகளில் மிகப் பெருமையாக எதைக் கருதுகிறீர்கள்” என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு, “1959-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று அண்ணாவிடம் வாக்குறுதி அளித்து, அதன்படி வெற்றியும் பெற்று முதன்முதலில் திமுக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு வருவதற்கு பணியாற்றியதற்காக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், என்னைப் பாராட்டி அண்ணா ஒரு மோதிரம் அணிவித்தார்.
அந்தப் பரிசை இப்போது நினைத்தாலும் எனக்கு கண்ணீர் வரும். அந்தக் கூட்டத்தில் அண்ணா என்னைப் பாராட்டிப் பேசியதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்” என்று கருணாநிதி உணர்வுப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அந்தளவுக்கு கருணாநிதியின் பொதுவாழ்வில் சென்னை மாநகராட்சிக்கு என தனி இடம் உண்டு. அதனால்தான் அவரது ஆட்சிக் காலத்தில் சென்னையின் கட்டமைப்பை மேம்படுத்த ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராகப் பணியாற்றியபோதுதான் சிங்கார சென்னை திட்டத்தை செயல்படுத்தினார்.
சென்னை மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்துக் கட்டமைப்பு, குடிநீர் திட்டங்கள் என எல்லாமே அவர் மேயராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்தான். அன்று மேயராக சென்னை எப்படியெல்லாம் வளர்ச்சியடைய வேண்டுமென திட்டங்களைத் தந்தாரோ, அதுபோலத்தான் இப்போது முதல்வராக சென்னை வளர்ச்சிக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் வடசென்னை வளர்ச்சித் திட்டம்.
தமிழகம் இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை தந்து கொண்டிருப்பதால் தமிழகத்தில் எந்தப் பகுதிக்கு முதல்வர் சென்றாலும் அவரை மாணவர்கள் அப்பா என அன்போடு அழைக்கிறார்கள். தந்தையாக இருந்து முதல்வர் நிறைய திட்டங்களை செயல்படுத்துவார். உங்கள் சகோதரனாக நானும் என்றும் துணைநிற்பேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக மேயர் பிரியா வரவேற்றார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை உரையாற்றினார். நிறைவில், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நன்றி கூறினார்.