புதுடெல்லி: நாளை மறுநாள் (பிப்.20) டெல்லி முதல்வர் பதவி ஏற்பு நடைபெறுகிறது. இதற்காக 3 மேடைகளுடன் பிரமாண்டமான ஏற்பாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்து கொள்கின்றனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 வருடங்களுக்கு பின் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயன்ற ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பிப்.20-ம் தேதி அன்று மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வருக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த ராம் லீலா மைதானமானது இந்திய அரசியல் கட்சிகளின் முக்கிய மேடையாகக் கருதப்படுகிறது. இதில் தான் ஆம் ஆத்மியின் முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்றார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பல நிகழ்வுகள் இம்மேடையில் நடைபெற்றுள்ளன. எனவே, பாஜகவின் முக்கிய நிகழ்வும் ராம் லீலா மைதானத்திலேயே நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரது அமைச்சரவை உறுப்பினர் கலந்து கொள்கின்றனர். பாஜக ஆளும் 20 மாநிலங்களின் முதல்வர்களும், துணை முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்துத்துவா கொள்கையின் பலனாலும் கிடைத்த பாஜக வெற்றியால் அதை முன்னிறுத்துவதும் தொடர்கிறது. இதற்காக, இந்து மதத்தின் முக்கியத் துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பாபா ராம்தேவ், பாபா பாகேஷ்வர் தீரேந்தர் சாஸ்திரி, சுவாமி சின்மயானந்த் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பெரு நிறுவனங்களில் அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் உள்ளிட்ட பல இதர மொழி நட்சத்திரங்கள் சுமார் ஐம்பது பேரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பாலிவுட் பாடகர் கைலாஷ் கேரின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகளுடன், கட்சித் தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். முக்கியமாக பஞ்சாப், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் நீர்த்துப் போகச் செய்யும் வகையில், பல முக்கிய விவசாயத் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆளும் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்களும் இதன் ஒரு மேடையில் அமரவைக்கத் திட்டமிடப்படுகிறது. இதன்மூலம், தன் ஆளும் கூட்டணியின் பலத்தையும் காட்ட பாஜக விரும்புகிறது. இதுபோல், பிரம்மாண்டமான முறையில் இந்த பதவி ஏற்பு விழாவை வரலாற்று சிறப்பு மிக்கதாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியின் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 48, ஆம் ஆத்மி 22 பெற்றிருந்தன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் தேர்தலில் பாஜக தன் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தவில்லை.
கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்பும் இதுவரையும் முதல்வர் யார் என்பதை வெளியிடவில்லை. இந்த பட்டியலில் டெல்லியின் பல பாஜக தலைவர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது பெண் முதல்வர்கள் எவருமே இல்லை. இதனால், எதிர்கட்சிகளின் மிகவும் முக்கியத் தலைவரான மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக பெண் முதல்வர் இல்லை. இதனால், டெல்லியின் முதல்வராக ஒரு பெண் அமரும் வாய்ப்புகளும் உள்ளன. எனினும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஜோடியின் திட்டங்களை பத்திரிகையாளர்களால் சரியாக ஊகிக்க முடியாமல் தொடர்வது நினைவுகூரத்தக்கது.