விருதுநகர் மாவட்டம், கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில், இரண்டு மகன்கள் உள்ளனர். அன்பரசன், கடந்த ஆறு ஆண்டுகளாக குடும்பத்துடன், கும்பகோணம் அருகே உள்ள மாதுளம்பேட்டையில், வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருப்புவனத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டராக அன்பரசன் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அன்பரசனுக்கும், அதே பேக்கரியில் வேலை செய்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளனர். கணவரின் நடவடிக்கையில் கலைவாணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், பேக்கரியில் வேலை செய்கிற பெண்ணுடன் தன் கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதையும் கலைவாணி கண்டுபிடித்துவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
`இந்த தகாத உறவைக் கைவிட்டு விடுங்க. நாம் சந்தோஷமாக வாழலாம்’ எனக் கூறி சமாதானமடைந்த கலைவாணி, கணவனை பேக்கரிக்கு வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக அன்பரசன் தச்சு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகும் அன்பரசன், அந்தப் பெண்ணுடனான பழக்கத்தை விடவில்லை. செல்போனில் பேசி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இது கலைவாணிக்கு தெரியவர, ஆத்திரம் அடைந்தவர், `எவ்வளவு சொல்லியும் நீ கேட்காமல் இருக்கிறாய்’ எனக் கேட்டு கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இது தொடர்பான பிரச்னை இருவருக்கும் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் அன்பரசன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஆத்திரம் அடங்காத கலைவாணி, அம்மிக் குழவிக் கல்லை தூக்கி கணவர் தலையில் போட்டுள்ளார். இதில் அன்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த, கும்பகோணம் மேற்கு போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் கலைவாணியைக் கைதுசெய்தனர்.