வதோதரா,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி வர்மா ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறிது நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் சாரா பிரைஸ் (23 ரன்கள்), ஷிகா பாண்டே (14 ரன்கள்) ஆகியோரின் பங்களிப்பினால் டெல்லி அணி கவுரமான நிலையை எட்டியது. 19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு தரப்பில் ரேனுகா தாகூர் சிங் மற்றும் ஜார்ஜியா வாரிஹாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கிம் கார்த் மற்றும் எக்தா பிஸ்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.