புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 1989ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜோஷியின் நியமனத்தைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் மூன்று தேர்தல் ஆணையர்களைக் கொண்ட முழு அமைப்பாக மாறியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் ஓய்வினைத் தொடர்ந்து தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் செயல்படுவர்.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான விவேக் ஜோஷி, கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் உள்ளார். முன்பு இவர், இந்திய அரசின் பணியாளர்கள் ஆணைய செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1966 ஆண்டு மே 21-ல் பிறந்த விவேக் ஜோஷி (58) வரும் 2031-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2029, ஜன. 27-ல் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலின் போது ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதமர் அலுவலத்தில் நடந்த கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு பின்பு, தலைமைத் தேர்தல் ஆணையராக அவரை நியமனம் செய்யும் உத்தரவு திங்கள்கிழமை வெளியானது.
என்றாலும் இதற்கு தேர்வு குழுவின் ஒரு உறுப்பினரான மக்களவைத் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலை ஆணையரை நியமிக்கும் குழு தொடர்பான வழக்கு விசாரணை புதன்கிழமை (பிப்.19) நடைபெற இருப்பதால் இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையருக்கான பெயர்கள் பரிந்துரையின் போது எதிர்க்கட்சி தலைவர் அங்கு இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் ஆணையரைத் தேர்வு குழுவுக்கு பிரதமர் தலைமைத் தாங்குகிறார்.