சண்டிகார்,
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவராக இருப்பவர் அனோக் மிட்டல் (வயது 35). தொழிலதிபரான இவருடைய மனைவி லிப்சி மிட்டல். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அனோக் மிட்டலுக்கு 24 வயதுடைய இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனை லிப்சி கண்டுபிடித்து விட்டார். இதனால், அவரை தீர்த்து கட்ட அனோக் முடிவு செய்துள்ளார். இதற்காக காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தேலோ நகருக்கு மனைவியுடன் அனோக் இரவு விருந்து சாப்பிட ஓட்டலுக்கு சென்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க காரை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் வந்து அனோக்கை தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் லிப்சி கொல்லப்பட்டார். சுயநினைவு திரும்பி அனோக் எழுந்து பார்த்தபோது, லிப்சி மரணம் அடைந்து கிடந்ததுடன், அவருடைய நகைகள் திருடப்பட்டு இருந்தன.
காரும் காணாமல் போயுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி காவல் ஆணையாளர் குல்தீப் சிங் சாஹல் கூறும்போது, இந்த சம்பவத்தில் சதி திட்டம் தீட்டிய முக்கிய நபராக அந்த பெண்ணின் கணவர் இருக்கிறார். கூலிப்படையினருக்கு ரூ.2.5 லட்சம் பணம் தரப்படும் என பேசி அனோக், ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்திருக்கிறார் என்றார்.
இதன்பின்னர், அனோக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில், அனோக்கின் காதலி, கூலிப்படையை சேர்ந்த அம்ரித்பால் சிங் என்ற பல்லி (வயது 26), குர்தீப் சிங் என்ற மன்னி (வயது 25), சோனு சிங் (வயது 24) மற்றும் சாகர்தீப் சிங் என்ற தேஜி (வயது 30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கூலிப்படையின் முக்கிய தலைவனான குர்பிரீத் சிங் என்ற கோபி தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான அசோக் பராஷர் பப்பி, அனோக்கை 4 மாதங்களுக்கு முன் கட்சியில் சேர்த்திருக்கிறார். இந்நிலையில், அவர் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.