புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு, கடந்த 2010, பிப்ரவரி 8-ம் தேதி கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தால், அரசுக்கு சுமார் ரூ.2,666 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்பட இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். அதுமுதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் சார்பில், வழக்கறிஞர்கள் அல்ஜோ ஜோசப், ஸ்ரீராம் பரக்கட், எம்.எஸ். விஷ்ணு சங்கர் ஆகியோர் ஆஜராகினர். அல்ஜோ ஜோசப் தனது வாதத்தில், ‘2018 டிசம்பரில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ், ஆறு ஆண்டுகளாக விசாரணைக் காவலில் இருக்கிறார். விசாரணைக் காவலில் சிறையில் அவர் கழித்த காலம், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அனுபவித்திருக்கக் கூடிய தண்டனைக்கு நிகரானது. அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், “இந்த வேகத்தில் வழக்கு நடந்தால் இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் விசாரணை நிறைவடைய வாய்ப்பில்லை” என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கியது.
கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் மீது ஏமாற்றுதல், குற்றவியல் சதி, ஊழல், பாதுகாப்பு விஷயத்தில் மோசடி போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஜூன் 2016 இல் மைக்கேலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில், அகஸ்டா வெஸ்ட்லேண்டிலிருந்து அவர் 30 மில்லியன் யூரோக்கள் (சுமார் ₹225 கோடி) பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.