விகடன் ப்ளஸ் இதழில் வெளியான அரசியல் கார்டூனை மையப்படுத்தி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், பிப்ரவரி 15 ஆம் தேதி மத்திய அரசு விகடனின் இணையதளத்தை முடக்கியது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பதை போல அந்த கார்டூன் வரையப்பட்டிருக்கும். அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு இராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் நிகழ்வு பல தரப்பின் கண்டனத்தை பெற்றிருக்கும் நிலையில், மத்திய அரசும் பிரதமர் மோடியும் அந்த விஷயத்தில் அமைதியாகவே இருந்து வந்தனர். அந்த அமைதியை சுட்டிக்காட்டும் வகையில்தான் விகடன் ப்ளஸ் இதழில் கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது.
தொடர்ந்து சரிந்துவரும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு மற்றும் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட விஷயத்தில் மத்திய அரசு அமைதி காத்திருக்கக்கூடும்.

இந்தியர்களை போலவே கொலம்பியர்களையும் அமெரிக்க அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றியது. ஆனால், கொலம்பிய அரசு இதை வேறுவிதமாக கையாண்டது. கொலம்பியர்களை கைவிலங்கிட்டு இராணுவ விமானத்தில் அமெரிக்க அரசு அனுப்பி வைத்தபோது, அந்த விமானம் கொலம்பியாவில் தரை இறங்குவதற்கான அனுமதியை அந்த நாட்டின் அதிபர் கஸ்தாவோ பெட்ரோ வழங்கவில்லை. `தங்கள் நாட்டு குடிமக்களை இப்படி தரம் தாழ்ந்த முறையில் குற்றவாளிகளை போல கையாள்வதை நாங்கள் விரும்பவில்லை’ என அமெரிக்காவுக்கு கொலம்பியா செய்தி சொன்னது.
கொலம்பியாவின் இந்த முடிவு, இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போருக்கு வித்திட்டது. கொலம்பியாவின் அதிகமான வரிகளை விதிப்போம் என ட்ரம்ப் மிரட்டினார். ஆனாலும் கொலம்பியா தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. தங்களின் சொந்த விமானப்படை விமானங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி கண்ணியத்தோடு அவர்களை கொலம்பியாவுக்கு அழைத்து வந்தார்கள்.
இந்த இடத்தில்தான் இந்தியாவின் நிலைப்பாட்டின் மீது கூர்மையான கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. உலகளவில் பெரும் சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தியா தங்களின் குடிமக்களுக்காக அவர்களின் கண்ணியத்தை காக்கும் வகையில் உறுதியான நிலைப்பாட்டை ஏன் எடுக்கவில்லை? இந்தியர்கள் அத்தனை பேரும் என் குடும்பத்தை போன்றவர்கள் என பிரதமர் மோடி அடிக்கடி பேசியிருக்கிறார். இதோ அமெரிக்கா இந்திய குடிமக்களின் கையில் விலங்கு கட்டி அனுப்பி வைக்கிறது. அது அவரின் சொந்த குடும்ப உறுப்பினரின் கையில் விலங்கு கட்டி அனுப்புவதை போன்றது இல்லையா? வர்த்தக நலன்களை காரணம் காட்டி இந்த அமைதிக்கு நியாயம் கற்பிக்கலாம், ஆனால், எல்லாவற்றுக்கும் மேல் மனிதாபிமானம் என்கிற விஷயம் முதன்மையாக இருந்திருக்க வேண்டாமா? இந்த விவகாரத்தில் இந்தியாவின் குரல் இன்னும் வலுவானதாக இருந்திருக்க வேண்டாமா?
இதுசம்பந்தமாக வாசகர்கள் எங்களுக்கு நிறைய கேள்விகளை அனுப்பியுள்ளார்கள். அதற்கான பதில்கள் இங்கே.
பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான விகடன் ப்ளஸ் இதழில் அட்டைப்படமாக அந்த கார்ட்டூன் வந்திருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன் பிரதமர் மோடி கை கால்களில் விலங்கிடப்பட்டு அமர்ந்திருப்பதை போல அந்த கார்டூன் வரையப்பட்டிருந்தது. அமெரிக்காவிலிருந்து இராணுவ விமானத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் விவகாரத்தில், மத்திய அரசும் பிரதமர் மோடியும் சரிந்து வரும் ரூபாய் மதிப்பையும் வர்த்த நலன்களையும் மனதில் வைத்து அமைதியாக இருந்ததை அந்த கார்ட்டூன் சுட்டிக்காட்டியது.

சர்ச்சையை கிளப்பிய அந்த கார்ட்டூன் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான விகடன் ப்ளஸ் இதழின் அட்டைப்படமாக வந்திருந்தது. இதனைத் தொடர்ந்துதான் பிப்ரவரி 15 ஆம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் அந்த கார்ட்டூன் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாக புகார் கொடுத்தார். அன்று மாலை 3 மணியளவிலேயே Press Bureau of India வை சேர்ந்த அதிகாரிகள் விகடன் அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்தனர். விகடன் ப்ளஸ் இதழ் அச்சிலும் வெளியாகிறதா என்கிற நோக்கில் விசாரித்தனர். விகடன் தரப்பில் விகடன் ப்ளஸ் இதழ் அச்சில் வெளியாகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
அண்ணாமலை புகார் கூறிய பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று மாலை 6 மணியிலிருந்து விகடன் இணையதளம் பல வாசகர்களுக்கும் வேலை செய்யவில்லை. விகடன் இணையதளத்தில் வாசகர்களின் வருகை வெகுவாக குறைவதை விகடனின் தொழில்நுட்பக் குழு கண்டறிந்தது. விஷயத்தை டொமைன் சேவை வழங்கும் நிறுவனத்திடமும் இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திடமும் எடுத்து சென்றனர். ஆனாலும், பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை பற்றி தெளிவான விடை கிடைக்கவில்லை.
பிப்ரவரி 16 ஆம் தேதியன்று தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் விகடனுக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதிலும் விகடனின் இணையதளம் முடக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.
கார்டூன் வரைவது ஒரு கலை. சமகால சூழலையும் நிலவரத்தையும் நையாண்டியாக அதேநேரத்தில் சிந்திக்க வைக்கும் விதத்திலும் சித்தரிக்கப்படுவதுதான் கார்ட்டூன்கள். அரசியல் தலைவர்களானாலும் சரி அரசின் உச்சத்தில் அமர்ந்திருப்பவர்களானாலும் சரி அவர்களுக்கும் இது பொருந்தும். அரசியல் நையாண்டிகளை விகடன் பாரம்பரியமாகவே செய்து வருகிறது. வின்ஸ்டன் சர்ச்சில்(சுதந்திரத்துக்கு முன்பாக), ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, வி.பி.சிங், நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், இப்போதைய பிரதமர் மோடி என பலரையும் விகடன் அந்தவகையில் நையாண்டியாக விமர்சித்திருக்கிறது.
அதேமாதிரி, எந்த பாரபட்சம் இல்லாமலும் மாநில அளவிலும் காமராஜர், அண்ணா,எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின் என பல முதல்வர்களையும் விமர்சித்திருக்கிறோம்.
எங்களின் கார்ட்டூன்களுக்கு யாருமே விதிவிலக்கல்ல.
(கார்ட்டூனை காண இந்த லிங்கை சொடுக்கவும்)
நிச்சயமாக இல்லை. அந்த கார்டூன் வரையப்பட்டிருந்த விகடன் ப்ளஸ் இதழ் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியானது. அப்போது பிரதமர் மோடி இந்தியாவில்தான் இருந்தார். இரண்டு கட்டமாக கையில் விலங்கிடப்பட்டு அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டப் பிறகு, பிப்ரவரி 13 ஆம் தேதிதான் பிரதமரின் அமெரிக்க சுற்றுப்பயணம் தொடங்கியது.
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்படும் விவகாரத்தை விகடன் ஏன் பெரிதாக பேசுகிறீர்கள். சட்டவிரோதமாக வேறு நாட்டில் குடியேற முயல்வது குற்றம்தானே?
சட்டவிரோத குடியேற்றம் கட்டாயம் சட்டவிதிகளுக்கு எதிரானதுதான். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அத்தனை உரிமையும் அமெரிக்காவுக்கு இருக்கிறது. ஆனாலும், 10 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் பயணத்தில் மக்களின் கைகால்களில் சங்கிலியை கட்டி அழைத்து வருவது மனிதாபிமானமற்ற செயல். அது மனித உரிமைகள் சம்பந்தமாக பெரும் கவலையையும் உண்டாக்குகிறது. இதுதொடர்பாக பேசும் அரசியலமைப்புச் சட்டத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அனுபவமிக்க வழக்கறிஞரான ருபாலி சாமுவேல், ‘பொதுவெளியில் வைக்கப்படாவிட்டாலும் சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்ற இரு நாடுகளுக்கிடையே ராஜதந்திரரீதியாக பரஸ்பர ஒப்பந்தம் இருக்கும். இந்த மாதிரியான கொடுங்கோண்மையான வெளியேற்றங்கள் மனிதர்களின் அடிப்படை மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் ஊறு விளைவிப்பவை. மேலும், இப்படியான வெளியேற்றங்கள் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கும் எதிரானவை. இன்னொரு நாட்டில் அவர்களின் சட்டதிட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இந்தியா தலையிட முடியாது. அதேநேரத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிட்டி முன்பாக ICCPR சட்டவிதி 41 மேற்கோள்காட்டி முறையிட முடியும்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை ‘ஒழுங்கற்ற புலம்பெயர்வாளர்கள்’ (Irregular Migrants) என்றே குறிப்பிடுகிறார். ‘சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள்’ என குறிப்பிடாத போது அமெரிக்க அரசாங்கத்திடம் பேசி நல்ல முறையில் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்பை எற்படுத்திக் கொடுத்திருக்கலாமே? நம்முடைய குடிமக்கள் கண்ணியத்தோடு நடத்தப்படுவதை அரசு உறுதி செய்திருக்கலாமே?
ஆம், முன்பும் இதே மாதிரியான வெளியேறுதல்கள் நடந்திருக்கத்தான் செய்கிறது. பைடனின் ஆட்சி காலத்தில் கூட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், அப்போது அவர்கள் தனி விமானத்தில் கை கால்கள் கட்டப்படாமல் சுதந்திரமாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், இப்போது பல மணி நேர பயணத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நம்முடைய குடிமக்கள் அனுப்பப்படுகிறார்கள். இது மனிதநேயமற்ற செயல். இந்த விவகாரம் கண்டிப்பாக கூடுதலான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ராஜதந்திரரீதியிலான பரஸ்பர நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும்.
தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் துறை சார்ந்த கமிட்டி முன் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி விகடன் தரப்பு வாதத்தை முன் வைப்போம். அதேமாதிரி, இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணையையும் எதிர்பார்க்கிறோம். அங்கு எடுக்கப்படும் முடிவு பத்திரிகை சுதந்திரம் சார்ந்த கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இல்லையெனில், சட்டரீதியான போராட்டத்துக்கும் விகடன் தரப்பில் தயாராகவே இருக்கிறோம்.
அரசின் நடவடிக்கைகளை விகடன் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல.
1942 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விகடனின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டது. 1987 இல் விகடனின் ஆசிரியர் சிறைவைக்கப்பட்டார். பல்வேறு அரசாங்களின் கீழ் பலமுறை அவதூறு வழக்குகளை சந்தித்திருக்கிறது.
பத்திரிகை தர்மத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் உயர்த்தி பிடிப்பதில் விகடன் எப்போதுமே உறுதியாக இருக்கும்.
பின் குறிப்பு:
பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்று வந்த பிறகும் அங்கிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் சங்கிலியிடப்பட்ட நிலையில்தான் அழைத்து வரப்படுகின்றனர் என்பதற்கு உறுதியான தகவல்கள் இருக்கிறது. கடந்த சனிக்கிழமை அமிர்தசரஸூக்கு வந்த இராணுவ விமானத்தில் தல்ஜீத் சிங்கும் ஒருவர். அந்தப் பயணம் முழுவதும் தாங்கள் எவ்வளவு கடுமையாக நடத்தப்பட்டோம் என்பதை அவர் விவரித்திருக்கிறார். ‘எங்களின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. கைகளில் விலங்கு மாட்டியிருந்தார்கள்.’ என ஹோசியார்பூரை சேர்ந்த நிருபர்களிடம் அவர் கூறுயிருக்கிறார்.